15 Feb 2022 8:15 pmFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-56
படைப்பாளர் - பரிவை சே. குமார், அபுதாபி
அந்த இடத்தில் அவளைக் காணவில்லை.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் அவள் இங்குதான் இருந்தாள். நேற்றுக் கூடப் பார்த்தேன்... இன்று அந்த இடம் வெறுமையைச் சுமந்திருந்தது. அவள் அங்கு இருந்ததற்கான அடையாளங்களே இல்லை.
எங்கே போயிப்பாள்..?
யாரைக் கேட்பது...?
அப்படியே கேட்டாலும் நீ ஏன் அவளைத் தேடுகிறாய் என்பது போன்ற ஏளனப் பார்வைதானே கிடைக்கும்.
அவள் இருந்த இடத்துக்கு நேர் எதிரே இருந்த டீக்கடைக்குப் போய் ஒரு டீ வாங்கிக் கொண்டு 'அண்ணே... எதிர்ப்பக்கம் ஒரு பொம்பள உக்காந்திருக்குமே எங்கே காணோம்..?' என்றேன் மெல்ல.
'தெரியலைங்க... நான் என்ன யார் வர்றா… யார் போறான்னு கணக்கா எடுத்துக்கிட்டு இருக்கேன்... வேற எங்கிட்டாச்சும் இடமாறிப் போயிருக்கும்...' என்றவர், 'ஆமா நீங்க எதுக்கு அதைத் தேடுறிய...' என என் முன்னே கேள்வியையும் வைத்தார்.
'இல்லண்ணே... தினமும் பார்ப்பேன்... இன்னைக்கு அந்த இடம் வெறிச்சோடிப் போயிக் கிடந்ததா அதான் கேட்டேன்...'
'ம்... அப்படிப் பொம்பளங்க கூடல்லாம் பேச்சு வச்சிக்காதீக... அப்புறம் வேற மாதிரி பிரச்சினையில இழுத்து விட்டுருவாளுங்க...' என்றார் சிரித்தபடி.
'அட ஏங்க நீங்க வேற... ஆளக் காணாமேன்னு கேட்டேன்... நீங்க என்னடான்னா என்னென்னமோ சிந்திக்கிறீங்க...' என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.
அவளுக்கு ஐம்பது வயதுக்குள்தான் இருக்கும். காலையிலிருந்து இரவு வரை அங்குதான் இருப்பாள். வீடு வாசல் இருக்கிறதா இல்லையா... அவளுக்கென துணை யாரும் இருக்கிறார்களா இல்லையா... என்பதெல்லாம் தெரியாது. பார்க்கும் நேரமெல்லாம் அதே இடத்தில்தான் பார்த்திருக்கிறான். எப்போதெனும் சிநேகமாய்ச் சிரித்திருக்கிறாள்.
தலை முடியை அள்ளிக்கட்டி கோடாலிக் கொண்டை போட்டிருப்பாள். நெற்றியில் மூன்று விரலும் பதிய துணூறுப் பட்டையும் அதன் நடுவே பெரிய பொட்டும் வைத்திருப்பாள். எப்பவும் வெற்றிலை மென்று கொண்டே இருப்பாள். அவள் இருந்த இடத்துக்குப் பின்னே வெற்றிலையை புளிச் புளிச்செனத் துப்பி வைத்திருப்பாள். கையில் சின்னதாய் ஒரு குச்சி... அதை வைத்துப் போவோர் வருவோருக்கு குறி சொல்லி, கொடுப்பதை வாங்கிக் கொள்வாள். இவ்வளவு வேண்டுமென எப்போதும் கறாராய்க் கேட்டதில்லை.
எனக்கு குறி, கோடாங்கியிலெல்லாம் எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. யாராவது ஒருவர் கையை நீட்டிக் கொண்டு நிற்பதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வரும். இன்னும் இப்படியான ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.
அலுவலகத்தின் சன்னல்வழி பார்த்தால் அவள் அமர்ந்திருக்கும் இடம் தெரியும் என்பதால் அடிக்கடி அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதுண்டு. பெரும்பாலான நேரம் சும்மாதான் உட்கார்ந்திருப்பாள். அது ஒரு புங்கைமர நிழல் என்பதால் வெயில் அதிகமாய் இருப்பதில்லை. மதியம் சாப்பிடவெல்லாம் செல்வதில்லை என்றே நினைக்கிறேன். அதே இடத்தில் இயற்கை உபாதையைக் கூடக் களிக்காமல் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள் என்றால் அவள் சுய புத்தியுடன் இருக்கிறாளா... அல்லது புத்தி பிரண்டவளா... என்பதெல்லாம் தெரியவில்லை.
இன்று முழுவதும் அவள் நினைவாகவே இருந்தது. அடிக்கடி அந்த இடம் பார்த்தேன்... அந்த இடம் வெறுமையாக இருந்தது.
‘அவள் என்ன ஆனாள்..?’ என்ற கேள்வி என் மனசுக்குள் சுழன்று சுழன்று அடித்தது.
ஏழு மணிக்கு அந்த இடத்தைக் கடக்கும் போது பார்த்தேன். புங்கை மரம் அநாதையாய் நின்றது. இரண்டு மாதங்களுக்கு மேலாக அதனுடன் உறவு கொண்டாடியவளைத் தொலைத்த சோகத்தில் நிற்பது போல் எனக்குத் தெரிந்தது.
கடந்து சென்ற நாட்களில் அந்த இடத்தில் ஒருத்தி இருந்தாள் என்பதையே மறந்து போனேன்.
சில நாட்களுக்குப் பிறகு யாரோ ஒருவர் புதிதாய் தள்ளுவண்டிக் கடை போட்டிருந்தார். இதற்காகக் கூட அவள் விரட்டப்பட்டிருக்கலாமோ எனத் தேவையில்லாத கேள்வி மனசுக்குள் எழுந்தது.
வடை சூப்பாராப் போடுறார் எனத் தள்ளுவண்டிக் கடையைப் பற்றி அலுவலகத்தில் பேச்சு எழுந்தது. இன்று சாப்பிட்டுப் பார்க்கலாம்... வீட்டுக்கும் வாங்கிப் போகலாமெனச் சின்னதாய் ஒரு ஆசை.
கடைக்குப் போய் வடை வாங்கி, நல்ல காரமாக இருந்த சட்னியில் நனைத்துச் சாப்பிட்டபடி புங்கை மரத்தைப் பார்த்தேன். அவள் ஞாபகம் வந்தது... கையில் குச்சியுடன் உட்கார்ந்திருந்தாள்... கோடாலிக் கொண்டையும் வட்டப் பொட்டுமாய் புங்கை மரம் சிரித்தது.
வடையை பார்சல் வாங்கிக் கொண்டு திருப்பியவன் ஏதார்த்தமாய் புங்கை மரத்துக்குப் பின்னே கண்களைச் செலுத்தினேன். கடையில் எரிந்த விளக்கு வெளிச்சத்தில் குப்பையோடு குப்பையாய் ஒரு பை கிடந்தது.
அந்தப் பை...
அவளின் காலருகில் எப்போதும் இருக்கும் பை... அதனுள்ளே இருந்து வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது குறி சொல்லும் கம்பு.
'நீ கடை போடுறதுக்கு முன்னாடி இங்க ஒரு கிறுக்கச்சி இருந்தா... போற வாரவுகளுக்கெல்லாம் குறி பாக்குறேன்னு காசு பறிச்சிக்கிட்டு இருந்தா, யாரோ ஒரு புண்ணியவன் போலீசுல சொல்லி, ராவோட ராவா தூக்கிட்டுப் பொயிட்டாங்க... இப்பத்தான் புள்ள குட்டிக பயமில்லாமப் போக முடியுது..' என ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க, வண்டியை ஸ்டார்ட் பண்ணினேன்.
'இங்க யார் கிறுக்கு..?' என புங்கை மரம் கேட்டது. எனக்குப் பதில் தெரியவில்லை...
பாவம் அவள்... என்ன செய்தார்களோ..?
அவளின் பை அநாதையாகக் கிடக்கிறதே அதில் என்ன இருக்கும்..?
அருகிலிருக்கும் மனநல விடுதியில் போய் விசாரிக்கலாமா..?
என எனக்குள்ளே கேள்விகள் எழ, மனசு அலை பாய, வண்டி வேகமாய்ப் பயணித்துக் கொண்டிருந்தது.
குறுக்கே ஒருத்தி ஓட, வண்டியை திடீரென நிறுத்தி, 'ஏய் உனக்கு அறிவிருக்கா..? ஆளும் மொகரையும் பாரு... இந்நேரம் போய்ச் சேந்திருப்பே...' என வாய்க்கு வந்தபடி அவளைத் திட்ட, அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள்.
அதே கோடாலிக் கொண்டை, நெற்றியில் பட்டை அதனூடே பெரிய வட்டப் பொட்டு...
ஒரு நிமிடம் திரும்பிப்பார்த்தாள்.
அந்த முகம் புங்கை மரத்தின் அடியில் இருந்தவளை ஞாபகத்தில் கொண்டுவர-
அவளோ என்னைப்பார்த்து வெற்றிலைக் கறை படிந்த பல் தெரிய சப்தமாய்ச் சிரித்தாள்.
அந்த இடத்தில்… அந்த நேரத்தில்… அந்தச் சிரிப்பொலி கொஞ்சம் அச்சமூட்டுவதாய் இருந்தது.
அவள் கையில் புதிதாய் ஒரு கம்புமுளைத்திருந்தது.
தோளில் பை இல்லை… அதற்குப் பதிலாக ஒரு துணி மூட்டை சிறியதாய் …
அவள் சலனமின்றிக் கடந்து போய்க் கொண்டிருந்தாள்...
நான் கடக்காமல் அங்கேயே நின்றேன்...
ரோட்டில் வேறு யாருமில்லை…
நிசம்ப்தத்தில் அவளின் பலத்த சிரிப்பொலி எல்லாப் பக்கமும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
சிறப்பான முயற்சி
கோடாலிக்கொண்டைகாரியின் கதையை விருவிருப்பாக படிக்க வைக்கும் வகையில் எழுதியிருப்பது சிறப்பு.
அருமை. இங்கு யார் கிறுக்கர்கள்? உண்மைதான். இயல்பான நடையில், புங்கை மரமும், கோடாலி முடிச்சிட்டு பெண்மணியும் மனதில் நிக்கிறார்கள். அவரவர் வாழ்வை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்..மற்றவர்களை கிறுக்கு என்றபடி.
அவரவர் வாழ்க்கை அதனதன் பாட்டையில் போய்க்கொண்டே இருக்கிறது, ஒரு சில மனதில் தேங்கியும் மறைந்தும்….. அருமை💐💐❤️
அருமை அண்ணா
அருமை….
அருமையான சிறுகதை. இக்கதையில் வரும் கதை மாந்தரான அந்த குறிசொல்லும் பெண்ணை எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்திருக்கலாம். கதையின் முடிவும் எதிர்பாரா திருப்பமாக சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்
எங்கே அவள் கதைக்கு ஏற்றார் போல் அவளை தேடுவதாகவே கதை அமைத்துள்ளது. கதை சொல்லும் போக்கு, நம்மை சுற்றியிருக்கும் எளிய மனிதர்களைக் கூட பார்க்காதவாது அமைத்துள்ளது.
அருமை
நன்றாக இருக்கிறது
யதார்த்தமான நிகழ்வை சொல்லிய விதம் அருமை
துளசிதரன்