16 Feb 2022 1:51 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி- 62
படைப்பாளர் - மைதிலி சம்பத், செகந்திரபாத்
தமயந்திக்கு உறக்கம் வரவில்லை. உடம்பு களைப்பாகத்தான் இருந்தது. ஆனால், மனதிற்கேது களைப்பு? அடுக்கடுக்காய் பழைய நினைவுகள்.
அறையின் அடுத்த ஓரக்கட்டிலில் படுத்திருந்த வீணா தூக்கத்தில் ஏதேதோ பிதற்றினாள். பாவம் ! அவளுக்கும் இவளை மாதிரி பிராப்ளம் தான். என்ன, இன்னும் கொஞ்சம் முன்னேற்றம். விவாக ரத்து என்று ஆகிவிட்டது. அந்த வீட்டில் தமயந்திதான் விவாக ரத்து ஆகாமல் கணவனைப் பிரிந்து வாழ்பவள். ராகினிக்குப் புருஷன் இறந்துவிட்டான். சியாமளா வரதட்சிணைக் கொடுமை தாளாமல் தனித்து வந்துவிட்டவள். கௌசல்யாவின் புருஷன் ஒரு குடிகாரன். “போடா” என்று வந்துவிட்டாள். ராணியின் புருஷன் இவளை வைத்து தப்பாக சம்பாதிக்கப்பார்த்தானாம். வெறுத்துப்போய் அவனை விட்டுத் தொலைத்து விட்டாள்.
இவர்கள் ஆறு பேரும் நல்ல வேலையில் இருப்பவர்கள். வெளிப்பார்வைக்கு அழகாக டிரஸ் செய்து கொண்டு, ஆளுக்கு ஒரு ஸ்கூட்டியில் வேலைக்குச் செல்பவர்கள். நல்ல காலம் கௌசல்யாவின் ஆதரவில்லாத சித்தி இவர்களுடனேயே வந்து தங்கிவிட்டாள். சமையல், வீட்டு நிர்வாகம் எல்லாம் அவள்தான். இவர்கள் எல்லோருக்குமே அவள் சித்திதான். மேல்வேலைக்கும் ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தார்கள். சுக வாழ்க்கைதான். சொல்லி வைத்தாற்போல் கணவன் சரியில்லை என்று ஆனபிறகு, தமயந்தி உட்பட எல்லோருமே பிறந்தகத்தோடு போனால், இன்னொரு கல்யாணம் பண்ணியே வைப்போம் என்று அவர்கள் பிடித்த பிடிவாதம் தாங்காமல் இங்கு இருப்பவர்கள்தான். இது ஒரு மூன்று பெட்ரூம் வீடு.
மறக்க நினைத்தாலும் தள்ள நினைத்தாலும் விலகிப்போகாதது என்றால் அது பழைய நினைவுகள்தானே ! பிடிவாதமாக அவை சில நாட்களில் வந்து வந்து இவளுடைய நிம்மதியைக் குலைத்துவிடும்.
விட்டுவிட்டு வந்துவிட்டாளே, ஆமாம், இவள்தான் விட்டுவிட்டு வந்தாள். சுரேஷ் நடந்து கொண்ட விதம் அப்படி. கல்யாணமான புதிதில் அவன் இப்படியா இருந்தான்? மூன்று வருடம் அவளோடு குடித்தனம் பண்ணியிருக்கிறானே ! எத்தனை அற்புதமான நாட்கள் அவை !
காலையில் அவன் சற்று லேட்டாகக் கிளம்பலாம், அவன் ஆபீஸ் நேரம் அப்படி. இவள் அவனை “நீ மெதுவாக எழுந்திரு போதும்” என்பாள்.
“ஏனோ?” என்பான் அவன் வம்படியாக.
“ராத்திரி என்ன கொட்டம் அடிச்சிருக்கே?” என்பாள்.
“அப்போ நீயும் வந்து படுத்துக்கோ.. நீயும் சேர்ந்துதானே” என்று அவன் தொடரும்போது அவன் வாயைப் பொத்திவிடுவாள். சில வேளைகளில் தூங்கியும் விடுவாள். சுரேஷ் காப்பி போட்டு, பிரேக்பாஸ்ட் தயார் செய்துவிட்டு அவளை எழுப்புவான். “நீ கிளம்பு” என்று பொறுப்பாக வீட்டைப் பூட்டிக் கொண்டு போவான்.
மாலையில் பூ வாங்காமல் வரமாட்டான். மாதம் ஒரு புடவை, வருடம் ஒரு நகை, வாரம் ஒரு அவுட்டிங் என்று கழித்த நாட்கள் அவை. அவனும் அழகாக டிரஸ் செய்து கொள்வான். அவளையும் நன்றாகத்தான் டிரஸ் செய்து கொள்ள வேண்டும் என்பான். எத்தனை நாள் தூங்கும் முன் அவள் வேண்டாம் என்றாலும் அவள் காலை அமுக்கிவிட்டிருக்கிறான். மூன்று வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது அவர்கள் இருவருமாக சேர்ந்து எடுத்த முடிவு. அந்த சமயம் நெருங்கும்போதுதான் என்னென்னவோ ஆகிவிட்டது.
அப்போது அவர்கள் அவனுடைய ஆபீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். முதலில் ஒரு மாடி ஃபிளாட் பெண்மணி “என்ன, நேத்திக்கு உன் பிறந்த நாளா? சாரி, தாமதமாகச் சொல்றேன். வாழ்த்துக்கள்.” என்றாள்.
“இல்லையே ! இப்போ எனக்குப் பிறந்த நாள் இல்லையே.” என்று இவள் சொல்ல “ஓ! அப்படியானா நான் நேத்து ஹோட்டலில் சுரேஷையும் உன்னையும் பார்த்ததாகத் தப்பா நினைச்சுட்டேன் போலிருக்கு” என்றாள்.
அடுத்த கொஞ்ச நாளிலேயேபக்கத்து தெருவில் இருக்கும் இவள் தோழி ஒருத்தி “ஏன் தமயந்தி ! என்னதான் உன் புருஷன் என்றாலும் கார்ல அப்படியா அவனோட சாஞ்சிப்பே கட்டிக்காத குறையா? வண்டி ஓட்டும்போது கவனம் சிதறிடாதா?” என்றாள்.
அதன் பிறகு இவளே ஒருநாள் காரில் இவனுடன் ஒரு பெண் போவதைப் பார்த்தாள். அவன் வீட்டிற்கு வந்ததும் சாதாரணமாகப் பேசுவதைப்போல் கேட்டாள்.
“அதுவா ? அவள் என் ஆபீஸில் வேலை செய்பவள். ஏதோ அவசரமாக வீட்டுக்குப் போகணும்னா. கொண்டு விட்டேன்” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு இவளுக்கு முகத்தையே காண்பிக்காமல் நகர்ந்துவிட்டான்.
ஆனாலும் இப்போதெல்லாம் அவனோடு கழித்த அந்தரங்கப் பொழுதுகளில் சொல்லத் தெரியாமல் ஏதோ இடறியது. எப்போதும் இவளிடம் பேசுவதெல்லாம் கொஞ்சல்ஸாகத்தான் இருக்கும். புகழ்ச்சியாகத்தான் இருக்கும் “நீ எனக்குக் கிடைத்த ஒரு பெரிய அதிர்ஷ்டம். இன்னும் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் நீதான் எனக்குப் பெண்டாட்டி” என்பான்.
இவள் அவனுடைய உயரத்திற்குப் பொருத்தமில்லாமல் குள்ளமாக இருப்பாள். அதை, தானே சுட்டிக்காட்டுவாள் “ஏய் ! அது ஒரு பெரிய விஷயமா? விட்டுத்தள்ளு” என்பான்.
இப்போது கொஞ்சல் என்றில்லை. சாதாரணப் பேச்சே கூட குறைந்துவிட்டது. இத்தனை நாட்களாக இருந்ததுபோல் இல்லை வாழ்க்கை. தொண்டையில் ஏதோ முள் குத்திய உணர்வு.
ஒரு நாள் இவர்கள் பில்டிங்கிலேயே வசிக்கும் சட்டர்ஜி இவளைக் கூப்பிட்டு அனுப்பினார்.
“அம்மா, தமயந்தி !நீ எனக்கு மகள் மாதிரி. அதனால என் மகளிடம் பேசுவது போல உன்னிடம் மனம் விட்டுப் பேசப்போறேன். எங்க ஆபீஸுக்கு ஸோனான்னு ஒரு பொண்ணு மும்பையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கிறாள். அவளுக்கு அங்கேயே ரொம்ப கெட்ட பெயர். எச்சரித்துத்தான் இந்த ஊருக்கு மாத்தியிருக்காங்க. சினிமா நடிகை கெட்டா, அப்படித்தான் டிரஸ் பண்ணிகிட்டு வருவா. உன் புருஷனை அவ தன் கைகுள்ளே போட்டுட்டிருக்கா. இன்னும் முழுசா கை மீறும் முன் உன் வாழ்க்கையைக் காப்பாத்திக்கோம்மா. எங்கே என்ன பிரச்னையோ சரி பண்ணிக்கோம்மா. ஆல் த பெஸ்ட்” என்று ஒரே மூச்சில் பேசி அவளை அனுப்பிவிட்டார்.
இவள் நேரடியாகவே சுரேஷைக் கேட்டாள். அதுதான் தப்பாகிவிட்டது. சிகெரட் பிடிக்கும் பையனை நேரடியாகக் கண்டித்தால் தைரியம் வந்து இதுவரை மறைவாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தவன் இப்போது நேராகவே பிடிக்க ஆரம்பித்துவிடுவான், இல்லையா? அதுபோல் சுரேஷ் “ஸோனாவோட வெளியே போகிறேன்” என்று சொல்லிவிட்டே போக ஆரம்பித்தான். பேங்க் பாஸ் புக்கில் பணம் குறைய ஆரம்பித்தது. அவளை வீட்டிற்கும் அடிக்கடி கூட்டி வந்த போது இவளுக்குத் தாங்க முடியவில்லை. சண்டை போட்டாள். அதிகம் வளர்த்துவானேன்?. சுரேஷ் இவளிடம் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து கேட்டான். “அது முடியாது. நீ என்ன வேணுமானாலும் செஞ்சிக்கோ” என்று தனியே வந்துவிட்டாள்.
பிறந்தகத்திற்குப் போனால் இன்னொரு கல்யாணம் செய்து கொள் என்று நச்சரிப்பு. பின்னே, அண்ணா, மன்னிக்குத் தொந்திரவாக இருந்ததே ! கடைசியில் இந்த வீட்டை அமர்த்தி, இந்த சினேகிதிகளுடன் வாழ ஆரம்பித்த பின்தான் நிம்மதி வந்தது. நிம்மதி என்றால் தொந்திரவு இல்லாத வாழ்க்கை. அவ்வளவுதான்.
அலைபாயும் மனத்தை என்ன செய்ய முடியும்? அந்தப் பாவி மேல் இத்தனை காதல் எனக்கு ஏன்? ஆனால், கூட வாழ்ந்த வருடங்களில் அப்படித்தானே அன்பைப் பொழிந்தான்? எங்கிருந்து வந்தாள் அந்தப் பிசாசு? வந்தது போலவே போய்விடக்கூடாதா? என்று தினம் வரும் நினைவுகளுடன் அன்றும் தூங்கிப் போனாள்.
காலையில் தமயந்தி எழுந்திருக்கும்போதே சற்று நேரமாகிவிட்டது. அவசரமாகத் தயாராக வேண்டிய அவசியமில்லை. அன்று ஸ்ரீராம நவமி. எல்லா ஆண்களும் ஸ்ரீராமனைப் போல் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துடனேயே எழுந்திருந்தாள்.
சித்தி வந்து “தமயந்தி! உன்னைப் பார்க்கணும்னு யாரோ வந்திருக்காங்க” என்றாள்.
“யாராக இருக்கும் என்ற ஆவலோடு வாசலுக்கு வந்து பார்த்தால், ஆனந்த அதிர்ச்சி! கீழே விழாமல் இருக்க சுவற்றைப் பிடித்துக் கொண்டாள். கறுத்து, இளைத்து, கசங்கிய ஷர்ட்டுடன் கலைந்த தலைமுடியுடன் நிற்கும் இவன் சுரேஷ் தானா?
ஹாலிலிருந்த முதல் ரூமே இவளுடையதுதான். அவள் அதற்குள் நுழையவும் அவனும் பின்னாலேயே நுழைந்தான். வீணா அறையில் இல்லை. கதவைத் தன் பின்னால் சாத்திவிட்டு “தமு, தமுக்கண்ணா ! என்னை மன்னிப்பியா?” என்று கைகூப்பினான் சுரேஷ். சொல்லிவிட்டு அவன் கைகளை விரிக்க அதில் புகுந்து அவன் மார்பில் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டாள் அவள்.
“நான் சோனாவைப் புரிந்து கொண்டுவிட்டேன் தமு. உன் அருமையையும்தான். என்னைவிட பணக்காரன் ஒருவன் கிடைத்ததும்…….” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் வாயைப் பொத்தினாள்.
“அப்போ நீங்க சொன்னதைத்தான் இப்போ நான் சொல்றேன். இன்னும் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் நீங்கதான் என் கணவனாக வர வேண்டும்” என்றாள் பிடியை விடாமலேயே.
அந்த வீட்டில் தங்கியிருக்கும் எல்லோரும் எப்போதும் பேசிக்கொள்வதுண்டு ‘ஒரு வேளை கணவன் என்றாவது மனம் திருந்தி வந்து கூப்பிட்டால், யார் யார் போவீர்கள் என்று. எல்லோரும் இவள் உட்பட’ வெட்கம் கெட்டவளாக இருந்தால்தான் போகமுடியும்’ என்று முத்தாய்ப்பு வைப்பார்கள்.
இவள் வெட்கம் கெட்டவளா? புத்திசாலியா?.