16 Feb 2022 2:33 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-64
படைப்பாளர் - சித்ரா, கோவை
அலைபேசி சிணுங்க பீட்டர் எடுத்துப் பார்க்க, அழைத்தது பாதர் ஜேம்ஸ்தான்.
"பாதர்! நான் பீட்டர் பேசறேன். சொல்லுங்க பாதர்"
"பீட்டர்! நான் சொன்ன மாதிரி காயத்ரி நாளைக்கு காலைல சென்னைக்கு வந்திடுவா""
" நீங்க கவலைப்படாதீங்க பாதர்!. நான் பாத்துக்கறேன்" என்றான் பீட்டர்
பாதர் ஜேம்ஸ் மும்பையில் "லிட்டிள் பிளவர்" என்கிற காப்பகத்தை நடத்துபவர். பீட்டர் தன்னுடைய கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் தனக்கு உதவியாளர் ஒருவரை தேடிய சமயத்தில் பாதர் ஜேம்ஸ் காயத்ரியைப் பற்றி கூறி சென்னைக்கு அனுப்பி வைத்தார்
"மாரப்பா....டேய் மாரப்பா..." வயலுக்கு போய் வந்த அசதியில் படுத்திருந்த மாரப்பன் சப்தம் கேட்டு சட்டென்று விழிக்க எதிரே தனது மகன் கண்ணன் அழுத விழிகளோடு அவனுடைய பள்ளிக்கூட வாத்தியார் சின்னச்சாமியும் நின்றிருந்தார்கள்.
"டேய் மாரப்பா. உம் பையனோட நடையும், பார்வையும் வேற மாதிரி இருக்குடா. ரொம்ப நெளியறான். இவன்கூட உக்காந்து படிக்கவே எல்லா குழந்தைகளும் பயப்படறாங்க. இனிமே இவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாதே" என்று சின்னச்சாமி உறுமிவிட்டு சென்றார்.
கண்ணன். உள்ளுர் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு படிக்கிறான். சில நாட்களாகவே மகனின் செயல்பாடுகள் மாரப்பனுக்கு புரியாத புதிராய் இருந்தது. சக நண்பர்களோடு விளையாட விருப்பமின்றி வீட்டிற்குள்ளேயே கிடந்தான். பேச்சில் நளினம் அதிகம் தெரிந்தது. அவனுள் கொஞ்சம் கொஞ்சமாக பெண்மை எட்டிப் பார்க்கத் தொடங்கியது கோபத்தோடு கண்ணனை பார்த்து முறைத்து விட்டு சென்றவன் நள்ளிரவு மூச்சு முட்டக் குடித்து விட்டு தள்ளாடியவாறு வீட்டருகே வந்தவுடன் கத்தத் தொடங்கினான்.
"ஏண்டி! அந்த நாய வெளியே வரச் சொல்லு"
"ஏய்யா இந்த நேரத்துல இப்படி கத்தற. அக்கம்பக்கம் எல்லோரும் தூங்கற நேரமய்யா" என்று மனைவி ரங்கம்மாள் கெஞ்ச, அவள் பேச்சைக் கேட்காமல் பின்னால் ஒளிந்திருந்த கண்ணனின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து
"ஏண்டா உறுப்படாத நாயே...இப்படி எங்களுக்கு பொறந்து உயிரா ஏண்டா வாங்கற பரதேசி பயலே. " என்றவாறு விறகுக் கட்டையை எடுத்து அவனை வெளுத்து வாங்கினான்
"அய்யோ அப்பா வலிக்குது. அடிக்காதீங்க அப்பா. வேண்டாம்பா வலிக்குது" என்று துடிதுடித்தான்.
"வேண்டாயா அவனை அடிக்காதே. அவன் ஒரு பாவமும் செய்யல. விடுயா" என்று கதற அதை அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தம்பியை காப்பற்ற வந்த கண்ணனின் அக்கா லட்சுமி கெஞ்சியதைப் பார்த்து மேலும் கோபம் தலைக்கேற
"போடி நீ அந்தப்பக்கம். இவனை இன்னிக்கு கொல்லாம விட மாட்டேன்" மாரப்பனின் சப்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளோர் அவனை தடுத்தும் ஆத்திரம் அடங்காமல்
"இனிமே இந்த வீட்டுப் பக்கம் வந்த கண்ட துண்டமாய் வெட்டிப் போட்டுறுவேன்" மாரப்பன் உறும, அடிதாங்க முடியாமல் அந்த இருட்டுக்குள் ஓடி மறைந்தான்.
"லட்சுமி...லட்சுமி" குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவள் அருகே தனது கணவன் பீட்டர் நிற்பதைக் கண்டவள் கண்களை துடைத்துக் கொண்டு
"வாங்க. எப்ப வந்தீங்க?" என்றவளின் அருகே சென்று
"லட்சுமி என்னாச்சு?" கேள்விக்கு பதில் கூறாமல் இருந்தவளை பார்த்தவுடன் லட்சுமி தனது தம்பியைதான் நினைத்துக் கொண்டிருந்தாள் என்பதை புரிந்து கொண்டான்
"குட்மானிங் காயத்ரி. ப்ளீஸ் சிடவுன்" என்று பீட்டர் காட்டிய நாற்காலியில் அமர்ந்தாள் காயத்ரி.
"தேங்யூ சார்" என்று அமர்ந்தவளை கவனித்தான் பீட்டர். ஆறடி உயரம். அடர்த்தியான புருவம். சிறியதாய் பொட்டு. உடுத்தியிருந்த சேலையில் ஒரு கம்பீரம். காயத்ரியை பார்த்தவாறு சிந்தனையில் இருந்தவனை கலைத்தாள் காயத்ரி
"சார்...சார்.." அழைப்பை கேட்டு சுதாரித்தவன்
"காயத்ரி! பாதர் ஜேம்ஸ் உங்களைப்பத்தி சொன்னார். உங்களோடு படிப்பு, தகுதி எல்லாம் எக்ஸளண்ட். இங்க வேலை செய்யறதுல உங்களுக்கு ஆட்சேபனை ஒண்ணும் இல்லையே?"
"எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. என்னை மாதிரி இருக்கறவங்களுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை நம்பி கொடுக்கறதுக்கு ரொம்ப நன்றி சார்" என்றவுடன்
"காயத்ரி! இங்க வேலை செய்யும்போது எந்த பிரச்சனை வந்தாலும் அதப்பத்தி கவலைப்படாதீங்க. எதுவானாலும் என்கிட்ட நீங்க சொல்லலாம்"
"என் வாழ்க்கை முழுவதும் எவ்வளவோ பேச்சும், அவமானமும் பாத்தாச்சு சார். இதுக்குமேல என்ன புதுசா வரப்போகுது. எனக்கு எல்லாமே பழகிப்போச்சு"
"ஆமா நீங்க தனியாவ வந்திருக்கீங்க?"
"இல்லை சார். எங்க அம்மா, தம்பிகூடதான் வந்திருக்கேன்."
"ஓ.கே. காயத்ரி ஆல் த பெஸ்ட்" என்று கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தான் பீட்டர்.
இரண்டு நாட்களாக காயத்ரி அலுவலகத்திற்கு வரவில்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தம்பிக்கு உடம்பு சரியில்லை அதனால் வர இயலவில்லை என்று சொன்னாள். அது உண்மைதானா? ஏனென்றால் தனது நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பவள் சுவாதி கூறியதுதான் அவனை யோசிக்க வைத்தது.
"சார்! நீங்க காயத்ரியை தகுதியின் அடிப்படையில்தான் செலக்ட் பண்ணியிருக்கீங்க. ஆனா இங்க நடக்கறதே வேற. நெறைய பேர் ஏதோ ஒரு கேலிப் பொருளாய் அவளை கிண்டல் பண்றாங்க. அவ காது படவே பேசறது ரொம்ப கஷ்டமா இருக்கு சார்" என்று சுவாதி வருத்தப்பட்டது பீட்டரின் நினைவுக்கு வந்தது.
அந்த குறுகிய சாலையோரத்தில் தனது காரை நிறுத்தினான் பீட்டர். தன் வீட்டருகே கார் நிற்பதைக் கண்டு வெளியே வந்த காயத்ரி பீட்டரை கண்டவுடன் முகமலர்ச்சியோடு
"சார்! வாங்க வாங்க..." என்று வரவேற்றாள் காயத்ரி
வீட்டிற்குள் வந்தவனை சோபாவில் அமரச் செய்து தனது அம்மா பார்வதியை அறிமுகப்படுத்தினாள் காயத்ரி. அவளின் அம்மாவிற்கு வணக்கத்தை தெரிவித்தவன்
"காயத்ரி! ஏன் ரெண்டு நாள் லீவு? என்னாச்சு"
"சார்! நான் ஏற்கெனவே சொன்னேனே. தம்பிக்கு ஒடம்புக்கு முடியல. அதான் லீவுசார்"
"சரி இப்ப எப்படி இருக்கு?"
“அஜிரணம்தான் சார். டாக்டர் வந்து பாத்தாரு. சரி சார் நீங்க என்ன சாப்பிடறீங்க?"
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உன்னை பாத்துட்டு போலாம்னு வந்தேன்"
"பரவாயில்லை சார். சும்மா சொல்லுங்க காபியா...டீயா" என்றவுடன்
"சரி. காபி" பீட்டர் கூறியவுடன் வேகமாய் அடுக்களைக்குள் நுழைந்தாள். மெல்ல வீட்டைச் சுற்றிலும் நோட்டம் விட்டான். சிறிய வீடாக இருந்தாலும் பல பொருட்களை அழகாய் வீடெங்கும் நிறைத்து வைத்திருந்தாள். சுவற்றின் மீது மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக கவனித்தாள். பாதர் ஜேம்சோடு புகைப்படம், தனது தாயர் பார்வதியோடு, சகதோழிகளோடு என நிறைய புகைப்படங்கள். குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தைப் பார்த்தவன் அதிர்ந்து போய் நின்றான்.
"சார்! இந்தாங்க காபி" காயத்ரியிடம் காபியை வாங்கியவன்
"இந்த படத்துல இருக்கறவங்க யாரு" என்று பீட்டர் காட்டிய புகைப்படத்தை பார்த்தவள்
"ஓ! இவங்களா? இவங்க எங்க அப்பா. இவங்க எங்கம்மா. இது…" காயத்ரி முடிப்பதற்குள்
"என்ன காயத்ரி சொல்ற? இவங்கதான் உங்க அம்மானு சொன்ன" என்று பார்வதியை குழப்பத்துடன் பீட்டர் காட்ட
"சார்! போட்டோவுல இருக்கறது என்னை பெத்தவங்கதான். ஆனா நான் வீட்டை விட்டு ஓடி வந்த பின்னாடி பிச்சை எடுத்து தெருத்தெருவா சுத்தினேன். அப்போ பாதர் ஜேம்ஸ்தான் அடைக்கலம் கொடுத்தாரு. அவரோட ஹோம்ல தன்னோட புருசனை இழந்த இந்த பார்வதி அம்மா சமையல்காரியா இருந்தாங்க. என்னை படிக்க வைக்க எந்த அளவுக்கு பாதர் ஜேம்ஸ் உதவி செஞ்சாரோ அதேபோல பார்வதி அம்மா எனக்கு தைரியம் சொல்லிக்கொடுத்து என்னை அவங்க பொண்ணு மாதிரி வளர்த்தாங்க. இன்னிக்கு அவங்களுக்கும், அவங்களோட பையனுக்கும் நான் பாதுகாப்பா இருக்கேன்" என்றாள் காயத்ரி. இதைக் கேட்ட பீட்டர் அந்தப் புகைப்படத்ததை மீண்டும் காட்டி
"இந்த போட்டோவுல இருக்கற இந்த பொண்ணு...." பீட்டர் முடிப்பதற்குள்
"அவங்க எங்க அக்கா லட்சுமி" என்றவுடன் புரிந்து கொண்டான். லட்சுமி என்று காயத்ரி காட்டிய அந்தப் பெண் தன்னுடைய மனைவி என்பதை
"ஏன் காயத்ரி? உங்க அக்கா இப்ப எங்க இருக்காங்க? அவங்க யாருனு உனக்கு தெரியுமா?"
"தெரியும் சார்" என்றவுடன் ஆச்சரியத்தில் பீட்டர் புருவங்களை உயர்த்த
"உங்களோட மனைவினு தெரியும் சார்" என்றாள். இதைக்கேட்டு அதிர்ந்த பீட்டர்
"எப்படி தெரியும்?"
"ஒரு நாள் நீங்க ஆபிஸ்ல இல்லாத நேரம் வந்து உங்களை கேட்டாங்க. அவங்களுக்கு என்னை அடையாளம் தெரியல. ஆனா நான் அடையாளம் கண்டுபிடிச்சுட்டேன்” என்றாள் காயத்ரி
"சரி காயத்ரி! இனி நீ தனியா இருக்க வேண்டாம். எங்ககூடவே வந்திரு"
"நான் எங்கே சார் தனியா இருக்கேன். பார்வதி அம்மா, தம்பிகூடதான இருக்கேன். இத்தனை வருசத்துக்கு அப்புறம் என்னால யாருக்கும் தொந்தரவு வேண்டாம் சார். அதுமட்டுமில்லாம என்னோட தம்பியை எங்கேயும் நான் கூட்டிட்டு வர முடியாது" காயத்ரி சொன்னதைக் கேட்ட பீட்டர் ஒன்றும் புரியாமல்
"என்ன சொல்ற காயத்ரி? நீ சொல்றது எனக்கு ஒண்ணும் புரியல" என்றவுடன்
"சார்! என்கூட வாங்க" என்று பக்கத்து அறைக்கு அழைத்து சென்றாள். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் கை கால்களை இழுத்தவாறு வாயில் எச்சில் ஒழுக படுக்கையில் கிடந்தான். ஏதோ புரியாத வார்த்தைகளால் உளறியபடி படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். ஒன்றும் புரியாமல் காயத்ரியை பீட்டர் நோக்க "இவன்தான் சார் என் தம்பி ராமு. மனவளர்ச்சியில்லாத குழந்தை. என்னோட வாழ்க்கைக்கு பாலமா இருந்த பார்வதி அம்மாவோட ஒரே பையன். எனக்கு வாழ்க்கை கொடுத்து ஓடாய் தேஞ்சுபோன அந்த அம்மாவோட பாரத்தை நான்தானே சார் சுமக்கணும். இது எனக்கு சுமைகூட இல்லை சுகம்தான். யாருமே இல்லாத அநாதையாய் சுத்தி திரிஞ்ச எனக்குனு இப்போ ஒரு வாழ்க்கை இருக்கு சார். கடவுளின் குழந்தையாய் இருக்கற இவனை பாத்துக்கறதே என்னோட அர்த்தமுள்ள வாழ்க்கை." கண்ணனாய் இருந்து காயத்ரியாய் திருநங்கை அவதாரம் எடுத்தவள் கூறிய வார்த்தைகளை கேட்டவன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இப்படி ஒரு பிறப்பெடுத்து அந்த வாழ்க்கையை இப்படிப்பட்ட ஒரு குழந்தைக்காக அர்ப்பணிக்கனும்னு நினைக்கற நீதான் காயத்ரி கடவுளின் குழந்தை என்று மனதிற்குள் எண்ணியவாறு காரை நோக்கி நடந்தான் பீட்டர்.
Beautiful narration… excellent story sir 👍🏼
Nice story
Heart touching story
மிகவும் சிறப்பான சிறுகதை.கதையில் எதிர்பாராத திருப்பம், கதையை சுவாரசியமாக மாற்றியுள்ளது.
சிறப்பாக உள்ளன வாழ்க வளர்க
நெகிழ்ச்சி அடைய வைத்த சிறப்பான படைப்பு
Migavum arumaiyaana pathivu..
Good one
முதலில் வழக்கமான கதையாய்ப் போய்க்கொண்டிருந்தது. லட்சுமியின் தம்பி தான் காயத்ரி என எளிதில் தெரிந்தது. இருந்தும் பார்வதி அம்மா தம்பி தம்பி நிலைமை அவனுக்கென வாழ்தல் என்பது ஒரு திருப்பம் தான். . கதை நன்று
நிறைவான சிறுகதை.திருநங்கைகளின் வாழ்க்கை வளம் பெற்று வருவதையும், அவர்தம் கருணை உள்ளத்தையும் நெகிழ்வுடன் படைத்துள்ளமைக்கு வாழ்த்துக்கள்
Story Narrated was good..
திருநங்கை யின் வாழ்வியலை வலியை வலிமையாக பதிவு செய்திருக்கும் அழகான கதை. வாழ்த்துக்கள்
Awesome heart touching…..
திருப்பங்கள் நிறைந்த அருமையான கதை. காயத்திரியின் தியாக வாழ்வும் அர்ப்பணிப்பும் மனதை நெருடுகிறது.
நல்லதொரு சிறுகதை. திருநங்கைகளை சமூகம் வெறுத்து ஒதுக்கக் கூடாது அவர்களும் மனிதர்களே என்று அழகாக உணர்த்தியது. வாழ்த்துகள்