16 Feb 2022 3:10 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-66
படைப்பாளர் - சண் தவராஜா, சுவிஸர்லாந்து
'வணக்கம் அண்ணன். எப்பிடிச் சுகம்?"
'நல்ல சுகம். நீங்க எப்பிடி?"
'நானும் நல்ல சுகம்? என்ன இந்தப் பக்கம் கனநாளாக் காணல்ல?"
'புது வேல ஒண்டு கிடைச்சாப் போல. லீவு இல்லாமப் போச்சு, அதுதான்..."
'நான் கவனிச்சநான். அக்காதான் ரெண்டு மூண்டு கிழமையாப் பொடியனக் கூட்டிக் கொண்டு வாறவா. உங்களக் கேப்பமெண்டு பாத்தன். சந்தர்ப்பம் வாய்க்கல்ல."
'ஏன்? ஏதும் அலுவலோ?"
'இல்ல, இல்ல. சும்மாதான். உங்களிட்டத்தானே நாட்டு நடப்புகளக் கேக்கலாம். அரசியல் விசயங்கள், ஊர்ப் புதினங்கள்.. அதுதான்.."
'அது சரி. நீங்க செய்தியொண்டும் பாக்கிறதில்லையே?"
'முள்ளிவாய்க்கால் வரையும் ஒரு நாள் கூட செய்தி பாக்காமல் இருக்கிறதில்ல. அதுக்குப் பிறகு செய்தி பாக்க மனமில்லாமல் போட்டுது. இப்ப செய்தியில விசயமுமில்ல, தரமும் இல்ல."
'அது சரி. நாம நினைக்கிறதச் செய்தியில பாக்க ஏலுமே? இது என்ன சினிமாவா? சினிமாவில மட்டும்தான் டைரக்டர் விரும்புற காட்சிய வைக்க ஏலும். அதுவும் சில நேரம் சென்சாரில இல்லாமப் போயிடும்..."
'நூத்துல ஒரு வார்த்த அண்ண. இதுதான் உங்களில எனக்கு மிச்சம் பிடிச்சது. என்னத்தக் கேட்டாலும் ஒரு பதில் வைச்சிருப்பீங்க. அதுசரி எலக்சன் பாடுகள் என்ன மாதிரி? மகிந்தவ எதிர்த்து மைத்திரி எண்டொருவர் களமிறங்கி இருக்கார். என்ன நடக்கும் எண்டு நீங்க நினைக்கிறீங்க?"
'என்னப் பொறுத்த வரைக்கும் மைத்திரியின்ர கை ஓங்கி இருக்கிற மாதிரித்தான் தெரியுது. யு.என்.பி,. சந்திரிகா, தமிழ்க் கூட்டமைப்பு, மனோ கணேசன் எண்டு பலரும் ஆதரவு குடுக்கிறாங்க. அது மட்டுமில்ல. மகிந்த சீனாவுக்குச் சப்போட் எண்ட படியா, மைத்திரிக்கு அமெரிக்கா வேற சப்போட் பண்ணுது."
'அப்ப, உங்கட கணக்குப் படி அடுத்த ஜனாதிபதி மைத்திரிதான் என்ன?"
'நான் அப்படித்தான் நினைக்கிறன். ஆனா, நாம நினைக்கிறது எல்லாம் நடந்திடுமா என்ன? அது சரி, தமிழ் வேட்பாளர் ஒருவர் களத்தில குதிச்சிருக்கிறாரெல்லே?"
'அந்தாளுக்கு வேற வேல இல்ல. வெல்ல மாட்டன் எண்டு தெரிஞ்சும் போட்டி போடுறார். இஞ்ச வெளிநாட்டில இருக்கிறவங்கள் காச அநியாயமாக்கிறாங்கள். அங்க வன்னியில சனம் பட்டினி கிடக்குதுகள். இதுகளுக்குச் செலவளிக்கிற காச அந்தச் சனங்களுக்குக் குடுத்தாலும் புண்ணியமாப் போகும்."
'மெல்லக் கதையடாப்பா. யாருட காதிலயாவது விழுந்திரப் போகுது. வீண் வில்லங்கம்."
'என்னண்ண, நீங்களே பயப்பிடுறீங்க?"
'எனக்கென்ன பயம்? வீண் சோலி எதுக்கெண்டுதான் பாக்கிறன்."
'அது சரி அண்ணன். உங்களிட்டக் கனநாளா ஒண்டு கேக்க வேணும் எண்டு நினைக்கிறநான். மறந்து போற."
'என்ன, எனக்குப் பொம்பிள கிம்பிள பாத்து வைச்சிருக்கிறியோ?"
'பகிடிய விடண்ண. நீங்க ஊரில எந்த இடமண்ண?"
'நான் மட்டக்களப்பு படுவாங்கரையடாப்பா."
'உண்மையாத்தானா அண்ண சொல்லுறீங்க? இவன் ராசன் என்னட்டச் சொன்னவன்தான். நான்தான் நம்பல்ல. அவர் இவ்வளவு அறிவாளியா இருக்கிறார். நிச்சயம் யாழ்ப்பாணமாத்தான் இருப்பார் எண்டு சொன்னனான்."
'உன்ர கணிப்பின்படி அறிவாளி எண்டால் யாழ்ப்பாணத்திலதானா பிறந்திருக்க வேணும்? அல்லது மட்டக்களப்பில பிறந்த ஆக்கள் எல்லாம் முட்டாள்கள் எண்டு நினைக்கிறயா?"
'கோவியாத அண்ண." அவன் குரலில் வருத்தம் தொனித்தது.
'இதில கோவிக்கிறதுக்கு என்னடாப்பா இருக்கு? நீ ஒருத்தன் மட்டும் அப்பிடி நினைக்கல்லையே! அது சரி, நீ எப்பயாச்சும் மட்டக்களப்புப் பக்கம் போயிருக்கிறியே?"
'நான் எங்கயண்ணன் போயிருக்கிறன். ஒருக்காப் போக வெளிக்கிட்டநான். பாயோட ஒட்ட வைச்சுப் போடுவாங்கள் எண்டு அம்மா மறிச்சுப் போட்டா."
'யாழ்ப்பாணத்தில மட்டக்களப்பு ஆக்கள மட்டுமே மட்டந் தட்டுறவங்கள்? தீவார், வன்னி, தோட்டக் காட்டார் எண்டு எல்லாரையுந்தானே மட்டந் தட்டுறவங்கள்?"
'அது மட்டுமில்ல அண்ணன். நீங்கள் எங்களப் போல நல்ல தமிழ் கதைக்கிறீங்கள். மறுகா, கிறுகி எண்ட சொல்லுகள் எல்லாம் நீங்க பாவிக்கிற இல்ல."
'முதல்ல நீ யாழ்ப்பாணத்து ஆக்கள் நல்ல தமிழ் கதைக்கிற, மற்ற இடத்தில இருக்கிற ஆக்கள் கொச்சைத் தமிழ் கதைக்கிற எண்டு சொல்லுறத நிப்பாட்டு. பிரதேச வழக்கு எல்லா இடத்திலயும்தான் இருக்கு. மனோகரா சிவாஜி மாதிரி உலகத்தில யாரும் தமிழ் கதைக்கிறதில்ல."
நீச்சல் பயிற்சிக்குச் சென்ற மகன் பயிற்சி முடித்து வந்ததால் எங்கள் உரையாடல் தடைப்பட்டு விட்டது.
******
யோகன் அப்பாவி. அவனில் பிழை இல்லை. சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் நிலவும் சிந்தனையை அப்பிடியே உள்வாங்கி வளர்ந்திருக்கிறான். ஆனால், அரசியல் பேசுவதாகச் சொல்லும் சிலரும் இதே சிந்தனையைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒன்றும் இரகசியம் அல்ல.
2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த சம்பவம் இது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்ற காலகட்டத்தில் சுவிஸ் நாட்டில் தமிழர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியும் ஆத்திரமும் நிலவியது. நான் சுவிசுக்கு வந்த புதிது. ஒரு மாலை நேரம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மிகக் குறைவான பயணிகளே அமர்ந்திருந்தனர். பாரிஸில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தேன். 'வணக்கம் தம்பி" குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
'செய்திகள் என்ன சொல்லுது?" என்றார் ஒரு தமிழர்.
'இப்ப எல்லாச் செய்தியும் கருணாவோட பிரச்சினைதானே?"
'அதுதானே தம்பி. கருணாவில தலைவர் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தவர்? இப்பிடிச் செய்து போட்டான். சோனிக்குப் பிறந்தவன். அதுதான் தொப்பி பிரட்டிப் போட்டான்"
'ஏன் அண்ணன் அப்பிடிச் சொல்லுறீங்கள்?"
'பின்ன என்ன? மட்டக்களப்பு ஆக்கள்ல ஒருத்தர், ரெண்டு பேரா? ராசதுரை காலத்தில இருந்து இதுதானே நடக்குது?"
'அப்ப, மாத்தயா, டக்ளஸ் எல்லாரும் எந்த ஊர் அண்ண?"
'அது வேற, இது வேற தம்பி. மட்டக்களப்பு ஆக்களின்ர ரெத்தத்திலேயே காட்டிக் குடுக்குற புத்தியும், கூட்டிக் குடுக்குற புத்தியும் இருக்கு?"
நான் பளார் என்று அவர் கன்னத்தில் அறைவேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். வெலவெலத்துப் போனார். மயக்கம் வந்தது போன்று கண்கள் செருகின. தன்னை அறியாமலேயே அவரது கை பேருந்தை நிறுத்துவதற்கான பொத்தானை அழுத்தியது.
பேருந்து நின்ற போதும் அவர் என்மீது வைத்த கண் வாங்கவில்லை. மீண்டும் தாக்குதல் தொடுப்பேன் என்று எதிர்பார்த்திருக்கக் கூடும். பின்வளமாக நகர்ந்து சென்று இறங்கிக் கொண்டார். பேருந்தின் கதவு மூடுவதற்கு இடையில் என்னைப் பார்த்து உரக்கக் கத்தினார். 'எளிய மட்டக்களப்பான்!"
எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. இது என்ன மனநிலை? இது போன்றவர்களை எப்படிப் புரிந்து கொள்வது?
***
எனது அனுபவம் இத்தோடு முடிந்துவிடவில்லை. என்னிடம் அறை வாங்கியவர் வேறு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு என்னைத் தாக்க வந்து விடுவாரோ என்கின்ற பயம் ஓரிரு வாரங்கள் இருக்கவே செய்தது. நானோ நாட்டுக்குப் புதிது. முகாமில் வேறு தங்கியிருக்கிறேன். அறிமுகமானவர்களும் வெகு குறைவு. உறவினர்களும் இல்லை. நாள் செல்லச் செல்ல பய உணர்வு குறைந்து விட்டது. சிலவேளை, நான் அறைந்ததைப் பற்றி அவர் வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கலாம். வெளியே சொன்னால், தனக்குத்தான் அவமானம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.
ஓரிரு மாதங்கள் சென்றிருக்கும். தெரிந்த ஒருவரோடு கடையொன்றிற்குச் சென்றிருந்தேன். பழைய பொருட்கள் விற்கும் கடை. தனது வீட்டிற்குத் தேவையான ஒரு பொருளை வாங்க வேண்டும், அதற்கு உதவி தேவை என நண்பர் கேட்டிருந்தார்.
நாங்கள் கடைக்குச் சென்ற போது, எனது நண்பருக்கு அறிமுகமான தமிழர் ஒருவர் உள்ளே பொருட்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் வணக்கம் சொன்னார். என்னை யார் என்று விசாரித்த போது, நான் முகாமில் இருப்பதாக நண்பர் சொன்னார்.
'அப்படியா தம்பி. யாரோ கருணாவின்ர ஆள் ஒருவர் புதுசா காம்புக்கு வந்திருக்கிறதாக் கதை அடிபடுகுது. தெரியுமா தம்பி?" அவர் கேட்டதும் என்னை அழைத்துச் சென்றவருக்குத் தர்ம சங்கடமாகிவிட்டது.
'கருணாவின்ர ஆள் யாரும் இருக்கிறதாத் தெரியல்ல. மட்டக்களப்பு ஆள்தான் ஒருத்தர் இருக்கிறார். அதைத்தான் யாரோ உங்களுக்குச் சொல்லியிருக்கிறாங்க போல?"
'மட்டக்களப்பு ஆக்கள நம்ப ஏலா தம்பி. அவங்க எங்களப் போல சைவம் சாப்பிடிறதில்ல. சோனிகளாட சேந்து தொப்பி பிரட்டப் பழகிற்றாங்கள்."
எனது நண்பர் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது
'நீங்க சொல்லுற ஆள் ஆரெண்டு தெரியல்ல அண்ண. ஆனா காம்பில இருக்கிற ஒரேயொரு மட்டக்களப்பு ஆள் நான்தான். "
அவர் எதிர்பார்க்கவில்லை. வெலவெலத்துப் போனார். சமாளிக்கும் குரலில் பேசத் தொடங்கினார்.
'இல்ல... தம்பி... யாரோ சொன்னதத்தான் நான் சொன்னனான்.. குறை நினைக்கதீங்க..!"
'ஒரு பிரச்சினையும் இல்ல. இதப் போல பல கதைகள என்ர காது கேட்டிருக்கு."
விறுவிறுவென்று கடையை விட்டு வெளியே வந்து விட்டேன்.
உள்ளே இருவருக்கும் இடையிலே வாக்குவாதம் நடப்பதை அவதானிக்க முடிந்தது.
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பது எவ்வளவு உண்மை. மனதில் இருப்பதுதானே வார்த்தைகளாக வெளியே வருகின்றன. மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம் மக்கள் மனதில் ஏற்படுத்திய பாதிப்புதான் என்ன? முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள்> சுமார் 3 இலட்சம் பேர் வரையான உயிரிழப்புக்கள். இருந்தும் என்ன பயன்? தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடாத்தப்படுவதாக அரசியல் பேசுவோர் தமிழர் மத்தியில் நிலவும் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடர்பில் என்ன செய்கிறார்கள்? சாதி> சமயம்> பிரதேசம் என்று எத்தனை விதமான பிளவுகள்? "தமிழன் என்றோர் இனமுண்டு> தனியே அதற்கோர் குணமுண்டு" என்ற வாசகத்தைக் கேட்க்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது.
அருமை
சிறப்பு
வாழ்த்துக்கள் ஐயா!
மிகவும் அருமையாக தொடர்கின்றீர்கள் ஐயா! வாழ்க தமிழ் இன்னும் வளர்க உங்கள் பயணம் வாழ்த்துக்கள்.
✅
மிகவும் அருமை
சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்
சிறப்பான கதை வாழ்த்துக்கள் 💐
இது கதையல்ல .. நிஜம் ! 100% நடந்தசம்பவம் . சில நேரங்களில் உண்மைகள் கசப்பானவைதான் ; அதற்காக உண்மை வெளிப்படாமல் உறங்கிப்போய்விடுவதில்லை! இந்தக் கதைக்குள் புலம்பெயர் வாழ்வியல் உண்டு ! ஈழத்தமிழர்களின் அறியாமையுண்டு ..! சாதியத்தைவிட புரையோடிப்போன பிரதேசவாதம் உண்டு ! இதனால் முன்பின் யாசிக்காமல் படித்தவரும் அறிவிலிகளாக .. சந்தர்ப்பவாதிகளாக கதைப்பதும் .. மன்னிப்புக்கோருவதும் அதனால் பாதிக்கப்படுபவனின் மனநிலையில் என்ன வேதனைதரும் என்றுணராத மக்களின் அசுமந்தப்போக்கினை இந்தக்கதை பளிச்சிட வைத்துள்ளது.
வெளிச்சம்போட்டுக்காட்டிய சண் தவராஜாவுக்கு அவரது துணிச்சலுக்கு ஒரு சபாஷ் .
சிறப்பான கதை, வாழ்த்துக்கள்
👍👍👍 கதை அருமை தமிழர்களின் பிளவு என்னங்களை அழகாக சொல்கிறது.
இலங்கையில் தமிழர் அதிபர் ஆனால் பொருளாதாரத்தில் இருந்து மீண்டுவிடும் ஆனால் சிங்கள தெலுங்கர்கள் தடையாக இருப்பார்கள்.
சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்
கதை மிக நன்று. யாழ்ப்பாண மக்களை பற்றிய உங்கள் கருத்து தற்போது வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு பொருந்தாது. சுவிஸ் வாழ் ஈழ எழுத்தாளரான உங்களுக்கு ஜப்னா தமிழன் வாழ்த்துக்கள்
உண்மை உரக்கச் சொல்லப்பட்டுள்ளது.
நாட்டின் கடந்தகால சமகால விடயங்கள் எளிய நடையில் எமது பேச்சு வழக்கில் கூறப்பட்டுள்ளமை சிறப்பபு.
பாராட்டுக்கள்.
Great 👍
யுத்தத்தின் பின்னர், தமிழ் மக்களின் எண்ணங்கள், ஏமாற்றங்களை பிரதிபலிக்கின்றது….
சிறுகதைகள் சிறிய சிறிய விடையங்களை பெரிதாக காட்டி இருக்கின்றது
வழமை போல் சண் தவராஜா அவர்களின் சிந்தனைகள் இந்தக் கதைகளிலும் தொடர்கின்றது
வாசிக்கச் சுவையாக உள்ளது.
இது அரசியல்,இயக்க, பிரதேச பாகுபாட்டை குறிகாட்டி நிற்கிறது
பொலிகை ஜெயா.
வாசிக்கச் சுவையாக உள்ளது.