17 Feb 2022 1:51 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-77
படைப்பாளர் - சக.மானேசா, திருச்சிராபள்ளி
பொதுவாக எனக்கு மூன்று கால்.
அப்படித்தான் எல்லோரும் கூறுவர். சொல்லப்போனால் நான் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாகியே விட்டேன். இப்போது அனைவரின் வீட்டிலும் நான் ஒரு குடும்ப உறுப்பினராவேன். ஆனால் என்னுடைய பெயர் குடும்ப அடையாள அட்டையிலோ வாக்காளர் பட்டியலிலோ இருக்காது. இந்த உலகம் வேகமாகச் சுழல்வது போல் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் முன்பெல்லாம் இப்படி இல்லை. ஞாலமும் காலமும் மாறின. மனிதர்களும் மாறினர். நானும் காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில், பல்வேறு நிறங்களில் மாறிக் கொண்டே இருக்கிறேன். இனியும் மாறுவேன்! ஏனென்றால் என்னை மாற்றுவதற்கு நிறைய பேர் உள்ளனர். இந்த உலகம் உறங்கியபோதும் நான் உறங்க மறுத்து உழைத்துக்கொண்டே இருக்கிறேன் எனது மூன்று கால்களில்.
சிலர் சில மணி நேரத்திற்கு ஒருமுறை என்னை நோக்குவர், சிலர் சில நிமிடங்களுக்குச் சிலமுறை நோக்குவர். இன்னும் சிலர் நொடிக்குநொடி என்னை நோக்குவர். இவ்வாறு நோக்குபவர்களை நானும் நோக்க மறுத்ததில்லை. சிலர் மகிழ்ச்சியோடு நோக்குவர், சிலர் சினத்தோடு நோக்குவர், சிலர் வெறுப்போடு நோக்குவர். எனினும், நான் என்றும் என் இன்முகத்தையே காட்டி வருகிறேன். மனிதர்களைப் போல எனக்குப் பல வேடம் போடத் தெரியாது. எனக்கு உணர்ச்சிகள் இல்லை என்று நினைக்கின்றனர் சிலர். அவர்கள் பைத்தியக்காரர்கள். என் உணர்வுகளை இதுவரை யாரும் புரிந்து கொண்டதில்லை. இனியும் புரிந்துகொள்ளப் போவதுமில்லை.
எதுவாயினும் சரி! நான்தான் இந்த உலகம் இயங்கக் காரணமாக இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். அப்படிச் சொன்னால் அது அகங்காரம். சாமானியனையும் சாதனையாளனாக்கி உள்ளேன். அச்சாதனையாளனை சரித்திரத்தில் இடம்பெறவும் வைத்துள்ளேன். எனினும் இதை எவரும் அறிவார் இல்லை, அப்படிப் புரிந்து கொண்டோர் வெகு சிலர். அவர்கள்தான் இந்த உலகின் வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி உள்ளனர். அரசியல்வாதிகள் கூறுவது போலவே எனக்கும் புகழ்ச்சி பிடிக்காது இருந்தாலும் கூறுகிறேன், கொஞ்சம் கேளுங்கள்!
என்னை உதாசீனம் செய்தவன் வாழ்வில் உயர்ந்ததாகச் சரித்திரமே இல்லை, இனியும் இரா. சில மனிதர்கள் என்னைப் பார்த்து ஏன் இத்தனை வேகமாக இயங்குகிறாய் என்று அதட்டுவர், சிலர் இன்னுமா அங்கேயே நிற்கிறாய் என்று கேள்வி கேட்பர். இவர்கள் இருவரும் ஒரு தராசின் இரு பக்கங்கள், ஆனால் அந்தத் தராசு என்றுமே சமமாக நின்றதில்லை. அதன் ரகசியம் யார்தான் அறிவார்? ஆனால் நான் அறிவேன்! இப்பேர்ப்பட்ட நான் சில நேரங்களில் உணவின்றிக் கால் ஓய்ந்து தள்ளாடி நிற்பேன். எனது அவசியம் அறிந்து உடனே எனக்கு ஊட்டமளிப்பவர்களும் உளர். எனது ஓட்டம் நின்றபிறகு என்னைச் சரிசெய்யாமல் ஓரங்கட்டுவோரும் உளர். அந்நேரங்களில் அமைதி காப்பதைவிட ஒன்றும் செய்ய இயலாது என்னால். நீங்கள் சிந்திப்பது சரிதான், நான் அவனே தான்!
நீங்கள் சிந்திப்பது தவறாயின் இன்னும் நீங்கள் என்னைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டியது உள்ளது. அது ஒருபுறம் இருக்கட்டும். நான் கூற வந்தது என்னவென்றால், தயவுகூர்ந்து என்னைப் புரிந்துகொள்ளும் முயற்சி எடுங்கள். நான் விடை அல்ல, வினா! ஒவ்வொரு நொடியும் புதியது. நான் ஒரு முறை சென்றால் திரும்பிவர மாட்டேன். அதுவே இயற்கையின் நியதி. இத்தருணத்தில் நீங்கள் நிகழ்காலத்தில் உள்ளீர்கள். என்னைப் பற்றிய அடுத்த பக்கத்தைப் படிக்கும்போது அத்தருணம் இறந்தகாலமாகி விடும். இப்போது பலருக்குப் புரிந்திருக்கலாம் நான் யாரென்று. சரி! இதற்குமேல் புதிர் கூடாது. நான் யாரென்று நானே கூறிவிடுகிறேன்.
என்னுடைய ஒரு நொடியைக்கூட வீணாக்கி விடாதீர்கள். ஏனெனில், ஒவ்வொரு நொடிகளும் இணைந்தால் நிமிடங்கள் பிறக்கும், சில நிமிடங்கள் இணைந்தால் மணி பிறக்கும், சில மணி நேரம் இணைந்து ஒரு நாளை உருவாக்கும், சில நாட்கள் வாரத்தையும் சில வாரங்கள் மாதத்தையும் சில மாதங்கள் வருடத்தையும் சில வருடங்கள் நூற்றாண்டுகளையும் சில நூற்றாண்டுகள் யுகத்தையும் உருவாக்கும். நான் அறிவேன் இனி எவரும் ஒரு நொடியை கூட வீணாக்க மாட்டார்கள் என்று! என் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் ஆனந்தம் அடைந்தேன். நீங்கள் கண்டறிந்து இருப்பீர்கள் என்ற ஆனந்தத்தோடு விடைபெறுகிறேன்! இப்படிக்கு என்றும் உங்கள் நான்...!
அருமையாக உள்ளது
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதி முத்திரை பதிக்கும் கதைகளை இச்சமூகத்துக்கு வழங்குங்கள்.