29 Sep 2020 12:39 amFeatured
பன்னாட்டுத் திருக்குறள் அறக்கட்டளை, மொரிசியஸ் மற்றும், எஸ். ஆர்.எம். கல்வி நிறுவனத் தமிழ்ப் பேராயம், சென்னை ஆகியவை இணைந்து நடத்தும் ஐந்து நாள் இணைய வழி பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு எதிர் வரும் செம்டம்பர் 29, 30, அக்டோபர் 1,2,3 ஆகிய நாட்களில் இணைய வழி மாநாடாக ஆஸ்த்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
இம்மாநாட்டில் மேனாள் மொரிசியஸ் அமைச்சரும், பன்னாட்டுத் திருக்குறள் அறக்கட்டளைத் தலைவருமான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் வரவேற்புரையாற்றுகிறார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், கருத்தரங்க இயக்குனருமான ஆஸ்திரேலியாவின் சட்ட வல்லுனர் முனைவர் சந்திரிகா சுப்ரமணியம் கருத்தரங்க அறிமுக உரையாற்றுகின்றார். எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக இணைத் துணை வேந்தர் இர. பாலசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றுகிறார்.
மாநாட்டில் சிங்கப்பூர், சீனா, மலேசியா, இலங்கை, இந்தியா, மொரிசியஸ், இலண்டன், கனடா போன்ற நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர். டாக்டர் மோகன், பொன்னையா பிள்ளை, ஜோடி மெக்கோ எம்.பி. ஜி. சாமுவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மும்பையிலிருந்து சு.குமணராசன்
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் ஆய்வரங்க சொற்பொழிவுகளில் முதல் நாள் (30-9-2020) புதன்கிழமையன்று முனைவர். அரிமளம் பத்மநாபன், “குறளும் இசையும்” என்ற தலைப்பிலும், மும்பை இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் “வள்ளுவரின் பெண்ணியக் கோட்பாடு” என்ற தலைப்பிலும் ஆய்வுரை வழங்குகின்றனர்.
மேலும் தொடர் நாட்களில் முனைவர் குறிஞ்சி வேந்தன், முனைவர் விஜயராணி, முனைவர் வி. ரேணுகாதேவி, முனைவர் ஜ. வள்ளி, புவனேசுவரி புருசோத்தமன் உட்பட பலர் உரையாற்றுகின்றனர்.
மாநாட்டின் நிறைவு நாளில் டாக்டர் கே. மதியழகன், ஜெயராம சர்மா, ஆஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹூமெக்டாமர்ட், ஆறுமுகம் பரசுராமன் (மொரிசியசு) ஆகியோர் நிறைவுரை ஆற்றுகின்றனர்.
மாநாடு நிகழ்வு இயக்குனர்களாக ஆசுத்திரேலிய சட்ட வல்லுனரும் தமிழ் வளர்ச்சி மன்ற பொறுப்பாளருமான முனைவர் சந்திரிகா சுப்பிரமணீயன், எஸ். ஆர்.எம் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பி.ஜெய்கணேஷ் அவர்களும் செயல் பட்டு ஒருங்கிணைத்து வருகின்றனர். மாநாட்டு நிகழ்வில் அனைத்துலக மக்கள் பங்கேற்கும் வகையில் ஆஸ்த்திரேலியா தமிழ் முரசு (Aussie Tamil Murasu) என்ற யூ டியூப் சேனல் வழியாகவும், செயலிகள் வழியாகவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
மும்பையிலிருந்து பெரும்பாலான மக்கள் பேராளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.