04 Feb 2020 9:18 pmFeatured
நடப்பு ஆண்டில் நடைபெறுவதாக இருந்த 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் பல பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும்,கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புவரை தற்போது அமலில் உள்ள முப்பருவக் கல்வி முறையில் ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், 5, 8-ம் வகுப்பு பொதுத்த தேர்வால் மூன்று பருவத்துக்குரிய புத்தகங்களையும் சேர்த்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் சிறுவயதில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய பெருஞ்சுமையை சுமக்க நேரிடும் என்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி பல்வேறு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
5, 8-ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தோ்வு எழுதவுள்ளதால் சற்று அச்சத்துடன் காணப்பட்டனர் அத்துடன் இளம் குழந்தைகளை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவது சிரமம் என்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. தேர்வில் தோல்விஅடையும் மாணவர்களின் படிப்பு இடையிலேயே தடைபடும் வாய்ப்பும் உள்ளது என பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற அரசின் அறிவிப்பால் மாணவர்களும் பெற்றோரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.