17 Feb 2020 2:29 pmFeatured
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்புடன் இம்மாதம் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இந்தியா வரவுள்ளார். அகமதாபாத் நகரில் மோடேரா பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை அவர்கள் தொடங்கி வைக்கின்றனர். அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த "ஹௌடி மோதி" (Howdy, Modi) நிகழ்ச்சிக்கு நடந்த ஏற்பாடுகளைப் போல அகமதாபாத்தில் "கேம் ச்சோ டிரம்ப்" என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அகமதாபாத்தில் அதிபர் டிரம்ப் தங்கியிருக்கும் 3 மணி நேரத்திற்கு 100 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் டிரம்ப் பயணப்படும் சாலைகளை புதிதாக அமைக்கவும், செப்பணிடவும் 80 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பாதுகாப்பிற்கு 12 முதல் 15 கோடி ரூபாயும், மேட்டெரா மைதானத்திற்கு வருபவர்களின் போக்குவரத்து செலவுகளுக்கு 7 முதல் 10 கோடி ரூபாய் செலவாகும். அகமதாபாத் நகரத்தை அழகுப்படுத்தவும் பூச் செடிகளை நடவு செய்யவும் 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மோடியும் டிரம்ப்பும் பயணிக்கும் சாலையில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக மட்டும் 4 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது..
அதிபரிம் இந்த இந்திய பயணம் வரவிருக்கும் தேர்தலுக்கு மிக முக்கியமானதாகும். அமெரிக்காவில் குஜராத்திலிருந்து சென்றவர்களே அதிகம் இருக்கின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே அகமதாபாத் இந்திரா மேம்பாலத்தின் அருகே இருக்கும் சரணியவாஸ் என்னும் குடிசைப்பகுதியை மறைத்து சுவர் எழுப்பும் பணிகள் நடைபெறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், இந்த பணிகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவசேனா சாடல்
டிரம்ப் வருகைக்காக தடபுடல் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த ஏற்பாடுகளை சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில், டிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது. டிரம்பின் இந்திய வருகை பேரரசரின் வருகை போல உள்ளது.
கரீபி சுப்பாவ்
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டன் அரசர் அல்லது ராணி, இந்தியா போன்ற தங்களின் அடிமை நாடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது டிரம்ப் வருகைக்காக மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் அதைப் போன்றே உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமை இருந்தது என்ற கோஷத்தை முன் வைத்தார். இந்திரா காந்தியின் கோஷம் நீண்ட நாட்களுக்கு ஏளனம் செய்யப்பட்டது. தற்போது, மோடி வறுமையை மறைப்பது போல தெரிகிறது. அகமதாபாத்தில் இவ்வளவு நீளமான சுவரை எழுப்ப நிதி ஒதுக்கீடு எதும் செய்யப்பட்டதா? நாடு முழுவதும் இவ்வாறு சுவர் எழுப்ப அமெரிக்கா கடனுதவி எதுவும் வழங்கப்போகிறதா? டிரம்ப், அகமதாபாத்திற்கு வெறும் 3 மணி நேரம் மட்டுமே செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு கருவூலத்தில் இருந்து ரூ.100 கோடி செலவில் சுவர் கட்டப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.