17 Apr 2022 10:50 amFeatured
அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் கலந்து கொள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை புறக்கணிப்பதாக முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதையடுத்து, தேநீர் விருந்தில் கலந்துகொள்வது சட்டமன்றத்தின் மாண்பை குழைப்பதாக இருக்கும். தமிழக சட்டசபையின் மாண்பையும் மக்களையும் தமிழ்நாடு ஆளுநர் மதிக்காததால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது.
மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாலும், தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மட்டும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டன.
இந்நிலையில் அமமுக சார்பில் அமைக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் கடந்த மாதம் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்ட பயணம் குறித்த ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று நடந்தது. ஆலோசனைக்கு பின்னர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆளுநர் பதவி, ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என அண்ணா கூறினார். அவர் வழிவந்தவர்கள் நாங்கள்.
தமிழ்நாட்டு மக்கள் பிரச்னையான மேகதாது, காவிரி பிரச்னை, நீட் பிரச்னை எது இருந்தாலும் அதுகுறித்த தீர்மானங்கள் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டியது ஆளுநரின் கடமை.
மாநிலத்திற்கு தேவையானவற்றை ஒன்றிய அரசிடமிருந்து பெற்று தருவதற்கான செயலை செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாதது தவறில்லை என்றே நினைக்கிறேன். அதிமுக ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. தங்களை காப்பாற்றிக்கொள்ளவே செயல்படுகின்றனர். அண்ணாமலை கருத்திற்கெல்லாம் நான் பதில்சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தேநீர் விருந்தை திமுக புறக்கணித்ததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால், டீ செலவு மிச்சம் அல்ல; பெட்ரோல் செலவு மிச்சம் என்று பெட்ரோல், டீசல் விலையை தொடர்புபடுத்தி எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.