07 Jan 2020 9:01 amFeatured
05.01.2020 ஞாயிறு மாலை 6 மணியளவில் தமிழ் எழுத்தாளர் மன்றக் கலந்தாய்வுக் கூட்டம் முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் வைத்து மன்றத்தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் நடைபெற்றது
அதுசமயம் மன்றத்தின் பழைய உறுப்பினர்களின் படிவங்களைப் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் என நிர்வாக சீரமைப்புப் பணிகளையும் இந்த ஆண்டில் நடத்தப்படவிருக்கின்ற இலக்கிய நிகழ்வுகள், சொற்பொழிவுகள்; புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி சிறுகதை, கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகள் வெளியிடுதல்; மும்பையைத் தாண்டி புனே நாசிக் போன்ற மராத்திய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில வசிக்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய உணர்வினை ஊக்கப்படுத்தும் விதமாக அந்தந்தப் பகுதிகளில் இலக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் மற்றும் வரவிருக்கின்ற நாட்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கின்ற தமிழ் மாணவ மாணவிகளுக்கு நம்மால் முடிந்த சிறு நிதியுதவி அளித்து கல்வி கற்பிக்க வைத்தல் போன்ற நலத்திட்டங்கள் சார்ந்த பல பொருண்மைகளைப் பற்றிய கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாணவ மாணவிகளின் மத்தியில் பெண்களின் சிறப்பை உணர்த்துகின்ற வகையிலும் தமிழுக்காக உழைத்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறை எடுத்துச் சொல்லும் வகையிலும் நிகழ்வுகளை அவர்கள் சார்ந்த பள்ளிகளுக்கே சென்று நடத்தவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் மன்ற நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு படிவங்களைப் பெற்று நிரப்பி ஆயுள் சந்தா மற்றும் ஆண்டுச் சந்தாதாரர்களாக தம்மை மன்றத்தில் இணைத்துக் கொண்டார்கள்.
மன்றப் பொருளாளர் அ.ரவிச்சந்திரன் துணைச்செயலாளர் பொற்செல்வி கருணாநிதி துணைப் பொருளாளர் அந்தோணி ஜேம்ஸ், செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், வே.சதானந்தன், கு.மாரியப்பன், ஆலோசகர்கள் கே.ஆர்.சீனிவாசன், ஞான அய்யாபிள்ளை, பாவலர் நெல்லை பைந்தமிழ், கவிஞர் பாபு சசீதரன், வெங்கட் சுப்ரமண்யன், ந. வசந்தகுமார், மெஹபூப் பாட்சா, பேராசிரியர் பிரபு, வீரை சோ பாபு, ஆ.பாலசுப்ரமண்யன், காரை கரு ரவீந்திரன் எஸ்.பெருமாள், தமிழ்மணி பாலா, ந.மகேந்திரன், அஞ்சாமை அறச்செல்வன் மற்றும் அ.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கலந்துகொள்ள முடியாதவர்கள் அவரவரது தொடர்பாளர்கள் மூலம் படிவங்களை நிரப்பிக் கொடுத்தனுப்பினார்கள்.
முன்னதாக தென்னரசு மின்னிதழின் வளர்ச்சி மற்றும் அதைத்தொடர்ந்து நடத்தப்படவிருக்கின்ற ஆண்டு விழா சம்பந்தமான கலந்தாய்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.