14 Feb 2021 9:41 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் பொங்கல் திருநாள் பட்டிமன்றம் 13-02-2021 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இணையம் வழியாக நடைபெற்றது.
மன்றப் பாடகி ராணி சித்ரா மொழி வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலஞ்சென்ற பத்திரிகையாளர்கள் கவிக்கொண்டல் செங்குட்டுவன் மற்றும் தினகரன் மும்பைப் பதிப்பின் ஆசிரியர் இராபர்ட் அமல்ராஜ் ஆகியோரின் மறைவிற்கு ஒருநிமிடம் மெளனம் அனுசரிக்கப்பட்டது.
மன்றத்தின் புரவலரும் 'எமிரேட்ஸ் என்பிடி வங்கியின்'(இந்தியா) தலைமை செயல் அதிகாரியுமான சேதுராமன் சாத்தப்பன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் வரவேற்புரை ஆற்றினார்.
இராணி மேரிக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முத்தமிழ் முரசு முனைவர் கே.இரா.கமலா முருகன் நடுவராக இருந்து நடத்தித்தந்த "ஏர்முனைப் பாடல்களில் விஞ்சி நிற்பவர்" என்ற தலைப்பில் நிகழ்ந்த பட்டிமன்றத்தில் கவியரசு கண்ணதாசனா! மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா! திரைக்கவித் திலகம் மருதகாசியா! என்ற துணைத் தலைப்புகளில் அணிக்கு இருவரென அறுவர் உரையாற்றினார்கள்.
கவியரசு கண்ணதாசனே! என்ற அணியில் இந்துக்கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஈஸ்வரி தலைமையில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலைப்பிரிவைச் சேர்ந்த பாடகி ராணி சித்ராவும்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமே! என்ற அணியில் வள்ளியம்மாள் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஆதிரா முல்லை தலைமையில் சமூக சேவகியும் ஆன்மிக சொற்பொழிவாளருமான கீதாஸ்ரீயும்
திரைக்கவித்திலகம் மருதகாசியே! என்ற அணியில் பல்வேறு தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் உரையாற்றிய புவனா வெங்கட் தலைமையில் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த கவிதாயினி சிவ சாந்தியும் உரையாற்றினார்கள்.
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் முனைவர் பெரியண்ணன் பொதுச் செயலாளர் இதயகீதம் ராமானுசம், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றப் பொதுச் செயலாளர் அமலா ஸ்டேன்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றப் புரவலர் அலிசேக் மீரான், ஆலோசகர்கள் கருவூர் பழனிச்சாமி, பாவலர் முகவைத் திருநாதன், ஆறுமுகப் பெருமாள், மன்சூர், கவித்துளிக் குமார், மலேசியாவைச் சார்ந்த ராமநாயகம், பேராசிரியர் சீனிவாசன், மும்பைத் தமிழ்ச்சங்க செயலாளர் சுந்தரி வெங்கட், ஜெரிமெரி தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.சீனிவாசகம்,
மற்றும் பெங்களூர் கண்ணன், சூர்யநாராயணன், தமிழறம் ராமர், கார்கர் தமிழ்ச்சங்க செயலாளர் செல்வி ராஜ் மற்றும் பல்வேறு தமிழ்சங்க நிர்வாகிகளும், எழுத்தாளர் மன்றத்தின் ஏனைய அங்கத்தினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைப்பிற்குப் பெருமை சேர்த்தனர்.
நிர்வாகக் குழுத் துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் நன்றியுரை ஆற்றினார். ஆட்சிமன்றக் குழுவைச் சார்ந்த வே.சதானந்தன் மற்றும் நிர்வாகக் குழுத் துணைச் செயலாளர் தேவராசன் புலமாடன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள்.
தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் கவிஞர்களும் பேச்சரங்க சாதனையாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றிய பட்டிமன்றத்தில் வேளாண்மை, மொழியின் தொன்மை, பண்பாடு, உழவு, கலை, பொழுதுபோக்கு என அனைத்து சிறப்புகளையும் வெளிக் கொணர்ந்து மொழிப்பற்றும் மொழியுணர்வும் ததும்பும் வகையில் நிகழ்த்தப்பட்டதனை அறிந்து தொடர்ந்து இதுபோன்ற மொழியுணர்வூட்டும் நிகழ்வுகளை நடத்துங்கள் என்றும் பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடப்பட்டது.