Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

உளவாளிகளின் மர்ம உலகம்-(தொடர்)

04 Sep 2019 1:37 amFeatured Posted by: Sadanandan

You already voted!

அத்தியாயம்-1
(ஏர் பிரான்ஸ் விமானம் கடத்தல்)

குறிப்பு: (இணையத்தில் படித்தது இதன் உரிமை ,உரிமையாளருக்கே, எனக்கு அல்ல)

ஜூன் மாதம் 27ம் தேதி 1976ம் ஆண்டு. பாரிஸ் விமான நிலையம். சர்வதேசப் புறப்பாடுகள் பகுதி.

ஏர் பிரான்ஸின் செக்இன் கவுண்டர்களில் வரிசைவரிசையாக பயணிகள் நின்றிருந்தார்கள். இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் செல்லும் விமானத்துக்கான பயணிகளை செக்இன் செய்து கொண்டிருந்தார்கள் ஏர் பிரான்ஸின் விமான நிலைய ஊழியர்கள்.

வழமையாக எந்தவொரு விமானமும் எந்த நாட்டுக்குப் போகின்றது என்பதைப் பொறுத்து அந்த நாட்டவர்கள்தான் பயணிகளின் எண்ணிக்கையில் பெரிய சதவிகிதம் இருப்பார்கள்.

அது போலவே இந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளில் மிகப்பெரிய சதவிகிதமானவர்கள் இஸ்ரேலியர்கள். அதற்கு அடுத்தபடியாக கிரேக்க நாட்டவர்களும், பிரென்சுக்காரர்களும் இருந்தார்கள். இவர்களைத் தவிர மிக சொற்ப எண்ணிக்கையில் வேறு நாட்டவர்கள்.

ஏர் பிரான்ஸ் விமானப் பிரான்ஸில் இருந்து கிளம்புவதால் அதில் பிரெஞ்காரர்கள் இருப்பது சரி. ஆனால் கிரேக்க நாட்டவர்கள் பிரான்சிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லவுள்ள இந்த விமானத்தில் ஏன் அதிகமாக தென்படுகிறார்கள்?
விமானம் முதலில் தரையிறங்கப்போவது ஏதென்ஸ்!

அந்த நாளைய பாரிஸ் விமான நிலையம் இதுதான். தற்போது இதன் தோற்றமே தலைகீழாக மாறிவிட்டது!

காரணம், ஏர் பிரான்ஸின் அந்த குறிப்பிட்ட விமானம் பாரிஸிலிருந்து நேரே இஸ்ரேல் செல்லும் விமானமல்ல. பாரிஸிலிருந்து முதலில் கிரேக்க நகரான ஏதன்ஸ் சென்று, அங்கு ஒரு மணிநேரம் நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டுதான் டெல் அவிவ் செல்லும் ரூட் அது. அதனால்தான் அதில் கிரேக்க நாட்டவர்களும் அதிகளவில் பயணிக்க வந்திருந்தனர்.

இந்த விமான ரூட்டிலுள்ள விசித்திரமான அம்சம் என்ன தெரியுமா?

விமானம் புறப்படும் பாரிஸ் விமான நிலையமும் பாதுகாப்புக் கெடுபிடி அதிகமுள்ள விமான நிலையம். விமானம் போய்ச் சேரும் இஸ்ரேலின் டெல்அவிவ் விமான நிலையத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகிலேயே மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் விமான நிலையம் அது. இந்த இரண்டுக்கும் இடையே விமானம் இயங்கி ஏறப்போகும் ஏதன்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மகா மோசம்!

இப்படி ஏதென்ஸ் வழியாகச் செல்வதால் அன்றைய தினம் குறிப்பிட்ட அந்த விமானத்தைக் கடத்துவதற்கு கடத்தல்கார்கள் குறிவைத்திருந்தார்கள்.
எதையும் கடத்திக்கொண்டு போக அட்டகாசமான விமான நிலையம்!

டிப்பாச்சர் லவுன்சில் பயணிகள் விமானத்துக்குள் ஏறுமுன்...

அந்த நாட்களில் ஐரோப்பிய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்த விமானநிலையங்களின் முக்கியமானது, ஏதென்ஸ் விமான நிலையம். (இன்றுகூட நிலைமை அதுதான்) பாதுகாப்புச் சோதனைகளுக்குள் சிக்காமல் எந்தவொரு பொருளையும் விமானம்வரை கடத்திச் செல்லக்கூடிய அளவில் இருந்தது அங்கு நிலைமை.

இந்த ஏர் பிரான்ஸ் விமானத்தைக் கடத்தத் திட்டமிட்டவர்கள் பாரிஸிலிருந்து விமானம் கிளம்பியபோதே பயணிகளாக அதற்குள் ஏறிவிட்டிருந்தார்கள். ஆனால் ஆயுதங்கள் எதுவுமில்லை. பாரிஸ் விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி ஆயுதங்களை ரிஸ்க் எடுத்து கொண்டுசெல்ல அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. ஏர் பிரான்சின் அந்த விமானம் ஏர்பஸ் A300 ரக விமானம். ரெஜிஸ்ட்ரேஷன் F-BVGG. ரூட் இலக்கம் 139.

விமானம் முதலாவதாகத் தரையிறங்கிய ஏதென்ஸ் விமான நிலையம். இங்கு கிரேக்க தேசிய விமான நிறுவனம் ஒலிம்பிக் ஏர்லைன்ஸின் விமானங்கள் அதிகம் நிற்பதைக் காணலாம்.

அதன் முதலாவது லான்டிங்காக ஏதென்ஸ் விமான நிலையத்திலும் இறங்கியது. ஏதென்ஸ் வரை பயணம் செய்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிக் கொண்டனர். டெல்அவிவ் செல்லும் பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே இருந்தனர்.

ஏதென்ஸ் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தில் புதிய பயணிகள் ஏற்றப்படுவதற்கு முன்னர், துப்பரவுப் பணியாளர்கள் மூன்றுபேர் விமானத்துக்குள் ஏறி துப்பரவு செய்தார்கள்.

அந்த மூன்று பேரில் ஒரு ஆள் கடத்தற்காரர்களின் ஆள்.

அவர் துப்பரவு செய்துவிட்டு இறங்குமுன்னர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை விமானத்தில் டாய்லட் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு இறங்கினார். துப்பரவுப் பணியாளர்கள் இறங்கிய உடனேயே விமானத்தில் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஒருவர் டாய்லட்டுக்குச் சென்றார்.

அவர் திரும்பவும் தனது சீட்டுக்கு வந்தபோது ஆயுதங்கள் அவருடன் வந்து விட்டன.
துப்பாக்கியுடன் கடத்தல்காரர் எழுந்தார்!

ஏதென்ஸ் விமான நிலையத்தில் பயணிகள். இங்குதான் ஆயுதங்கள் ஏர் பிரான்ஸ் விமானத்துக்குள் போய்ச் சேர்ந்தன!

ஏதென்ஸ் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியபோதே கடத்தல்காரர்களின் கைகளில் ஆயுதங்கள் வந்துவிட்டன. ஏதென்ஸிலிருந்து விமானம் கிளம்பி சுமார் அரைமணி நேரத்தின்பின், முதலாவது கடத்தல்காரர் கையில் துப்பாக்கியுடன் தனது சீட்டிலிருந்து எழுந்தார்.

அந்த நிமிடத்தில் விமானத்தின் கட்டுப்பாடு கடத்தல்காரர்களின் கைகளுக்குப் போனது. விமானம் கடத்தப்படுகிறது என்ற தகவலை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த விமானி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் வாடி ஹாடாட் என்ற தீவிர இஸ்லாமிய விடுதலை அமைப்பினர்.

விமானத்தைக் கடத்தியவர்கள் விஷயம் தெரியாத ஆட்களல்ல. அவர்களுக்கு விமான நகர்வுகள் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு (ஆபிரிக்கா) செல்வதற்கு விமானத்தில் எரிபொருள் போதுமானதாக இருக்காது என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.

ஏதென்சில் இருந்து டெல்-அவிவ் இருக்கும் தூரத்தின் அளவிலான தூரத்திலிருக்கும் மற்றுமோர் விமான நிலையத்திற்கு விமானத்தைச் செலுத்தச் செய்வதாக திட்டம் வைத்திருந்தார்கள்.
கடத்திய விமானத்தை முதலில் தரையிறக்க…

அப்படி, அவர்கள் மனதில் வைத்திருந்த நாடு லிபியா. (காரணம் லிபியா இந்தத் தீவிரவாத அமைப்பினர்மீது ஓரளவு பரிவு வைத்திருந்த நாடுகளில் ஒன்று)

கடத்தல்காரர்கள் சொல்லிக்கொடுத்தபடி, ஏயார் பிரான்சின் விமானி தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தைக் தொடர்பு கொண்டு விமானத்தைக் கடத்தற்காரர்களின் உத்தரவுப்படி லிபியாவை நோக்கித் திருப்புவதாகத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் லிபியாவின் பென்காசி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

அங்கே இவர்கள் கேட்டுக் கொண்டபடி விமானத்துக்கு முழுமையாக எரிபொருள் நிரப்பப்ப லிபிய அரசு சம்மதித்தது.

இதற்கிடையே ஏர் பிரான்சின் விமானம் கடத்தப்பட்ட விபரம் வெளியே தெரியவந்துவிட ஊடகவியலாளர்கள் பலர் பென்காசி விமான நிலையத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர்களில் யாரையும் விமானத்துக்கு அருகே செல்லவே லிபியப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.

விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த லிபியாவிலிருந்த பிரென்ச் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசமுடியாது என்று கடத்தல்காரர்கள் கூறிவிட்டார்கள்.

பென்காசி விமான நிலையம் உண்மையில் ஒரு விமான நிலையமாகக் கட்டப்பட்டதல்ல. இது ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவத் தளம். விமான நிலையத்திலுள்ள போஸ்ட் ஆபீஸைப் பார்த்தாலேதெரியும்.

இந்தக் கட்டத்தில் விமானத்துக்குள் ஒரு சுவாரசியமான நாடகம் நடைபெற்றது. கடத்தப்பட்ட பயணிகளில் இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமுற்று இருப்பதாகத் தெரிவித்து, தனக்கு இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதையடுத்து மயக்கமாகி சீட்டில் சரிந்தார்.

கடத்தல்காரர்கள் தமக்குள் ஆலோசனை செய்தபின் அந்த இளம்பெண்ணை மாத்திரம் பென்காசியில் வைத்து விடுவிக்கச் சம்மதித்தனர். இப்படியாக பணயக் கைதிகளில் முதலாவதாக இந்த இளம்பெண் விடுவிக்கப்பட்டார்.

சரி. “விமானத்துக்கு உள்ளே ஒரு நாடகம் நடைபெற்றது” என்று இந்தச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. விடுவிக்கப்பட்ட அந்த இளம் பெண் உண்மையில் கர்ப்பிணி அல்ல. சும்மா பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டார்!
கடத்தல்காரர்களுக்கு முதல் பிரச்சினை

எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் பென்காசி விமான நிலையத்திலிருந்து கிளம்பியபோதுதான் கடத்தியவர்கள் முதலாவது பிரச்சனையைச் சந்தித்தார்கள்.

கடத்தற்காரர்களின் திட்டம் என்னவென்றால் ஏதென்ஸ் விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பியவுடன் விமானம் கடத்தப்படவேண்டும். அங்கிருந்து பென்காசி சென்று எரிபொருள் நிரப்பவேண்டும். அதன்பின்னர் சூடான் நாட்டின் கார்ட்டூம் விமான நிலையத்துக்கு விமானத்தைச் சொலுத்திச் சென்று அங்கே தரையிறங்கவேண்டும்.

இந்தக் கடைசிப் பகுதியில்தான் சிக்கல்.

கடத்தப்பட்ட F-BVGG ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் விமானம் இதுதான். கடத்தல் முடிவுக்கு வந்தபின் இந்த விமானம் உகண்டாவிலிருந்து பிரான்சுக்கு வந்து சேர்ந்தது. அதன்பின் இந்த விமானத்தை ஏர் பிரான்ஸ் விற்றுவிட்டது. அதை வாங்கிய நிறுவனம் வியட்நாம் ஏர்லைன்ஸ். தற்போது இந்த விமானம் TC-MNA என்ற ரெஜிஸ்ட்ரேஷனுடன் கார்கோ விமானமாக மாற்றப்பட்டுள்ளது.

விமானம் கிளம்பியபோது விமானியிடம் கார்ட்டூம் விமான நிலையம் நோக்கிச் செல்லும்படி கடத்தியவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். விமானமும் அந்தத் திசையில் செலுத்தப்பட்டது. ஆனால் சூடான் நாட்டு அதிகாரிகள் இந்த விமானத்தைத் தமது நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

சூடான் நாடும் தங்கள்மீது அனுதாபம் வைத்திருக்கும். எனவே அங்கே விமானத்தைத் தரையிறக்கிவிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று இந்த விடுதலை அமைப்பினர் வைத்திருந்த திட்டம் குழம்பிப்போனது.
எங்கே போவது என்று தெரியாமல் பறந்த விமானம்

இந்த விமானம்தான் கடத்தப்பட்ட ஏர்பிரான்ஸ் விமானத்தின் இன்றைய தோற்றம். 3 தடவைகள் கைமாறி, தற்போது எம்.என்.ஜி. என்ற கார்கோ நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கிறது.

விமானம் சிறிது நேரம் எங்கே போகின்றது என்ற இலக்கு இல்லாமல் சூடான் இருந்த திசையில் பறந்து கொண்டிருந்தது. அதற்குள் கடத்தியவர்கள் தங்களுக்குள் கூடி ஆலோசித்தார்கள். ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டில்தான் விமானத்தை இறக்குவது பாதுகாப்பானது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். சூடான் தரையிறங்க அனுமதிக்க மறுத்தபின் வேறு எங்கே செல்வது.

இரண்டாவது தேர்வாக அவர்கள் தேர்ந்தெடுத்த நாடு உகண்டா.

விமானத்தை உகண்டாவை நோக்கித் திருப்பும்படி விமானியிடம் கூறினார்கள். உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் சர்வதேச விமான நிலையம் பூகோள ரீதியில் இவர்கள் முதலில் செல்லத் திட்டமிட்டிருந்த கார்ட்டும் விமான நிலையத்திலிருந்து குறைந்த பாகை வித்தியாசத்திலேயே இருக்கிறது.

எனவே சூடான் நோக்கிச் சென்ற விமானத்தை இலகுவில் உகண்டாவை நோக்கித் திசைதிருப்பிவிடலாம். கார்ட்டூம் நகருக்கும் கம்பாலா நகருக்கும் இடையிலுள்ள தூரம் வெறும் 1053 மைல்கள்தான் என்பதால் கடத்தப்பட்ட விமானத்திலுள்ள எரிபொருளும் போதுமானதாக இருக்கும்.

இப்போது விமானி தரைக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு உகண்டாவில் தலையிறங்க அனுமதி வேண்டுமென்று கேட்டார்.

கடத்தப்பட்ட A300 ரக விமானத்திக் காக்பிட்.
இடி அமீனே நேரில் வழங்கிய அனுமதி

ஆச்சரியகரமாக உடனே அனுமதி கிடைத்தது. அதுவும் உகண்டாவின் அன்றைய தலைவர் இடி அமீன் தானே நேரடியாக அனுமதி வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அனுமதி கிடைத்தவுடன், ஏர் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் தலைநகர் கம்பாலாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்த என்டபே விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளில் இஸ்ரேலியர்களைத் தவிர மற்றய நாட்டுக்காரர்கள் அனைவரையும் கடத்தல்காரர்கள் உடனே விடுதலை செய்துவிட்டார்கள்.

அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தின் காப்டனாகப் பணியாற்றியவர் Michel Bacos. பிரென்ச்காரரான இவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்தபோதும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். விமானத்தின் காப்டனான தனது பொறுப்பிலேயே அனைத்து விமானிகளும் இருப்பதால் அதில் ஒருபகுதியினரை விட்டுவிட்டுத் தன்னால் விடுதலையாகிச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார் இவர்.

இவரைப் பின்பற்றி ஏர் பிரான்சின் மற்றய விமானப் பணியாளர்களும் விடுதலையாக மறுத்து, பணயக் கைதிகளுடனே தங்கிக் கொண்டனர்.

இடி அமீன் - ஆச்சரியகரமாக விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்தார்!

விடுதலையாக மறுத்த மற்றொருவர் அந்த விமானத்தில் பயணித்த பிரென்ச் கன்னியாஸ்திரி. துறவியான தனக்குப் பதிலாக பணயக் கைதிகளில் ஒருவரை விடுவிக்குமாறு இவர் கடத்தல்காரர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரைப் பணயக் கைதியாக வைத்திருக்க கடத்தல்காரர்கள் சம்மதிக்கவில்லை.

இறுதியில் என்ன நடந்தது? அவரை வைத்திருந்தால் இது மத ரீதியான விவகாரமாகத் திரும்பிவிடும் என்று, உகண்டாவின் பாதுகாப்புப் படையினர் இந்தக் கன்னியாஸ்திரியைப் பலவந்தமாக அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.

இப்போது பணயக் கைதிகளாக இருந்த 105 பேரில் 85 பேர் இஸ்ரேலிய, மற்றும் இஸ்ரேலியப் பிரஜைகளில்லாத யூதர்கள். மிகுதி 20 பேரும் ஏர் பிரான்ஸ் விமானச் சிப்பந்திகள். இவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் வைத்துக்கொண்டு தமது கோரிக்கைகளை வெளியிட்டார்கள் கடத்தல்காரர்கள்.

ஏர் பிரான்சின் விமானச் சிப்பந்திகள் (புதிய யூனிபோர்ம்)

மொத்தம் மூன்று கோரிக்கைகள். முதலாவது, இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் நாற்பது பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும். இரண்டாவது, ஐரோப்பிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும்.

மூன்றாவது, கென்யா நாட்டில் நைரோபி விமான நிலையத்திலிருந்து எல்-அல் இஸ்ரேலி ஏயார்லைன்ஸின் விமானம் ஒன்று கிளம்பும்போது அதை சாம்-7 ரொக்கட்டால் அடித்து வீழ்த்த முயன்ற இரு ஜேர்மன்காரர்கள் கைது செய்யப்பட்டு கென்யாவின் சிறையில் இருக்கிறார்கள். அந்த இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறினால் பணயக் கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள். இதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூன் மாதம் 30ம் திகதி.
பிரதமர் வைத்திருந்த ரகசியத் திட்டம்!

இஸ்ரேலில் அவசர அவசரமாக மந்திரிசபை கூடியது. பிரதமர் ரேபின் இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் 40 பேரை விடுதலை செய்யச் சம்மதிப்பதுபோலக் காட்டிக் கொண்டார். ஆனால், அதற்கு இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதால் அதற்கு சில நாட்கள் அவகாசம் எடுக்கும் என்றும் கூறிக்கொண்டார்.

அந்த நாளைய ஏர் பிரான்ஸ் விமானத்தின் இன்டீரியர். தற்போது இது புதிதாக வடிவமைக்கப்பட்டுவிட்டது. விமானச் சிப்பந்தியின் பழைய யூனிபோர்மைப் பாருங்கள்.

ஆனால், உள்ளே வேறு ஒரு திட்டம் இருந்தது.

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் அதிரடியாக ரகசிய ஒப்பரேஷன் ஒன்றைச் செய்து பணயக் கைதிகளை விடுவிப்பதுதான் உள்ளேயிருந்த நிஜத்திட்டம்.

இது நடந்தபோது மொசாத்தில் தலைவராக இருந்தவர் யிட்சாக் ஹோபி. அவர் பிரதமருடன் ரகசியமாக ஆலோசனைக்கு அழைக்கப்பட்டார். அப்போதுதான் இஸ்ரேல் வெளிப்படையாகக் கூறாமல் ரகசிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் யோசனை ஒன்று தம்மிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார் பிரதமர்.

இந்த ஒப்பரேஷன் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்படவேண்டும். துரிதமாகவும் முடியவேண்டும். ஏதாவது தவறு நடந்தால் இஸ்ரேலியப் பணயக் கைதிகளின் உயிர்கள் எடுக்கப்பட்டுவிடும் என்பது மொசாத்தின் தலைவருக்கு கூறப்பட்டு அப்படியான முறையில் ஒரு ஆப்ரேஷன் நடத்த முடியுமா என ஆலோசனை கேட்கப்பட்டது.
“இது உங்களால் முடியுமா?”

“இது உங்களால் (மொசாத்தால்) முடியுமா? அல்லது பேசாமல் கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு இணங்கி எமது சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லையா” என்று கேட்டார் பிரதமர்.

“நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அதற்குச் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விட்டால் அதிரடியாக ஒரு ஆப்ரேஷன் நிச்சயம் செய்ய முடியும்” என்று கூறிவிட்டு அலுவலகம் திரும்பினார் மொசாத்தின் தலைவர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் கேட்டிருந்த அனுமதி வந்து சேர்ந்தது.
தொடரும்...........................

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096545
Users Today : 6
Total Users : 96545
Views Today : 9
Total views : 416683
Who's Online : 0
Your IP Address : 3.137.180.62

Archives (முந்தைய செய்திகள்)