05 Sep 2019 10:13 amFeatured
அத்தியாயம் 2-1
(மொசாத் திட்டமிடத் தொடங்குகிறது! )
“மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விடுங்கள். மொசாத்தால், அதிரடியாக ஒரு ஆப்ரேஷன் நிச்சயம் செய்ய முடியும். கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பணயக் கைதிகளையும் மீட்க முடியும்.” மொசாத்தின் தலைவர் இவ்வாறு கூறிவிட, இறுதியில் இஸ்ரேலியப் பிரதமர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தார்.
“இந்த அதிரடி நடவடிக்கையில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது. மொசாத் சுதந்திரமாகச் செயற்படலாம்”
மொசாத் களத்தில் இறங்கியது!
இதில் மொசாத்துக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கடத்தப்பட்ட விமானம் தரையிறங்கியிருக்கும் இடம்!
அது உகண்டா.
அதில் என்ன சிக்கல்? 1972ம் ஆண்டே உகண்டா அரசு இஸ்ரேலுடன் இருந்த ராஜாங்க உறவுகளைத் துண்டித்து விட்டிருந்தது. அப்போதே உகண்டாவிலிருந்த இயங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டு, அங்கிருந்த அனைவரும் உகண்டாவை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருந்தார்கள். அதற்குப் பின்னர் எந்தவொரு இஸ்ரேலியரும் உகண்டாவுக்குள் நுழைவது என்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத காரியமாகப் போயிருந்தது. எனவே இந்த விமானம் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் இறக்கப்பட்டபோது, உகண்டா நாட்டிலேயே மொசாத்தின் ஏஜன்ட்கள் யாரும் இருக்கவில்லை. நிலைமை கொஞ்சம் கஷ்டமானதுதான் என்பது மொசாத்தின் தலைவருக்குப் புரிந்தது.
இது ஒரு கடினமான, அதே நேரத்தில் பல உயிர்களுடன் சம்மந்தப்பட்ட ஆப்ரேஷன். இதைச் சரியாகவும் துல்லியமாகவும் நடத்த வேண்டுமானால், அதற்கு இந்த ஆப்ரேஷன் மொசாத்தில் பணிபுரியும் மிகத் திறமைசாலியான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மொசாத்தின் தலைவர் யோசித்தபோது, அவரது நினைவில் முதலில் தோன்றிய பெயர் டேவிட் கிம்சே!
மொசாத்தின் தலைவர் டேவிட் கிம்சேயை உடனடியாக அழைத்து இந்த ஆப்ரேஷன் பொறுப்பைக் கொடுத்தார். இந்த ஆப்ரேஷன் டேவிட் விரும்பிய வகையில் மேற்கொள்ளப் பூரண சுதந்திரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.
டேவிட் யோசித்தார்.
ஆப்ரேஷனுக்காக மொசாத்தின் உளவாளிகளை உகண்டாவுக்கு உள்ளே அனுப்ப முடியாது. உகண்டாவுக்கு அருகில் உள்ள ஏதாவது நாடு ஒன்றில் வைத்துத்தான் இந்த ஆப்ரேஷன் செயற்பட வேண்டும். அதற்கு அந்த நாடு அல்லது அந்த நாட்டின் உளவுத்துறை சம்மதிக்க வேண்டும். மொசாத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
அருகில் உள்ள எந்த நாடு கைகொடுக்கும்?
உகண்டாவுக்கு அருகில் உள்ள ஒவ்வொரு நாடு பற்றியும் டேவிட்டால் அலசப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் சாதகமான அம்சங்கள் என்ன? பாதகமான அம்சங்கள் என்ன? அந்த நாட்டிலிருந்து உகண்டா எவ்வளவு தூரம்? அந்த நாட்டிலிருந்து உகண்டாவுக்குள் நுழைவதென்றால் எப்படி நுழையலாம் என்று பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.
இறுதியில் டேவிட் தேர்ந்தெடுத்த நாடு கென்யா.
இந்தத் தகவல் மொசாத்தின் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேல்மட்ட அரசியல் தொடர்புகள் மூலம் கென்யாவின் உளவுத்துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு அவரைக் கோரினார் டேவிட்.
மொசாத்தின் தலைவருக்கு கென்யாவின் உளவுத்துறைத் தலைமையுடன் நேரடிப் பரிச்சயம் இருந்தது. மொசாத்தின் தலைமை உடனடியாக கென்யா நாட்டு உளவுத்துறையின் தலைவரைத் தொடர்பு கொள்ள, கென்ய நாட்டு உளவுத்துறை மொசாத்துக்கு உதவுவதற்கு சம்மதித்தது.
அடுத்த கட்டமாக, மொசாத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளான ஆறு உளவாளிகள், கென்யத் தலைநகரான நைரோபியில் போய் இறங்கினார்கள்.
விமானத்தில் தீவிரவாத அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடி ஆப்ரேஷன் ஒன்றை நடத்த மொசாத் தனது திறமைசாலிகளான 6 உளவாளிகளை அனுப்பி வைக்கிறது என்ற விபரம் கென்யாவின் உளவுத்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு கென்யாவில் தேவையானவற்றைச் செய்து கொடுக்குமாறு ஒரு கோரிக்கையும் இஸ்ரேலில் இருந்து கென்யாவுக்கு ராஜதந்திர மட்டத்தில் போய்ச் சேர்ந்தது.
உளவாளிகள் தங்கவைக்கப்பட்ட வீடு
ஆறு மொசாத் உளவாளிகளும் கென்யாவின் நைரோபி நகரை அடைந்தவுடன் அவர்களை சேஃப் ஹவுஸ் என உளவு வட்டாரங்களில் குறிப்பிடப்படும் பாதுகாப்பான வீடுகளில் ஒன்றில் தங்கவைத்தார்கள் கென்ய நாட்டு உளவுத்துறை அதிகாரிகள்.
பொதுவாகவே எல்லா நாட்டு உளவுத்துறைகளும் இப்படியான சேஃப் ஹவுஸ்களை வைத்து இயக்குவது வழக்கம். வெளிப்படையாக மக்கள் குடியிருப்புகள் போலவே தோற்றமளிக்கும் இந்த வீடுகள் உளவுத்துறையினரின் பிரத்தியேக பாவனைகளுக்கானவை.
மொசாத்தின் ஸ்பை மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட டேவிட் கிம்சே. மொசாத்தின் சாதனை படைத்த பல ஆப்ரேஷன்களின் திட்டமிடல் இவருடையதுதான்!
நைரோபியில் இப்படியான சுமார் 20 வீடுகளை கென்யாவின் உளவுத்துறை வைத்திருந்தது. மக்கள் குடியிருப்புக்களில் கலந்திருந்த இந்த வீடுகள் தகவல் தொடர்புக்கான பாதுகாப்பான தொலைபேசி இணைப்புக்ளைக் கொண்ட வீடுகள். ஆனால், அந்த தொலைபேசி இணைப்புக்கள் கென்யாவின் தொலைத் தொடர்பு இலாகாவினால் நிர்வகிக்கப்படும் இணைப்புக்கள்.
சுருக்கமாகச் சொன்னால், அங்கிருந்து மேற்கொள்ளப்படும் எந்தத் தொலைத் தொடர்பும் கென்ய உளவுத்துறை அறியாமல் வெளியே செல்ல முடியாது!
முதலில் அனுப்பப்பட்ட ஆறு மொசாத் உளவாளிகளில் இரண்டுபேர் உளவாளிகள் மாத்திரமல்ல, அவர்கள் டெக்னீஷின்கள்கூட. அவர்கள் இதுபோன்ற ரகசிய ஆப்ரேஷன்கள் வெளிநாடுகளில் மொசாத்தால் நடத்தப்படும்போது வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு சேனல் ஒன்றை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அவர்கள் மூலமாக, நைரோபியில் இருந்த வீட்டுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் நகரத்துக்கும் நேரடியாக சேட்டலைட் தொலைத் தொடர்பு இணைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இந்த இணைப்பு கென்யாவின் தொலைத்தொடர்பு இலாகாவுக்கு ஊடாகச் செல்லாத இணைப்பு என்பதலால், இவர்களது உரையாடல்களை கென்யாவில் யாருமே கேட்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதன்பின் இந்தப் பாதுகாப்பான வீட்டிலிருந்த உளவாளிகளுக்கு உத்தரவுகள் மொசாத்தின் தலைமையகத்தில் இருந்து வரத்தொடங்கின.
அதிரடி ஆப்ரேஷனுக்காக இப்படி உகண்டாவுக்கு வெளியே கென்யாவில் முன்னேற்பாடுகள் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் உகண்டாவில் என்ன நடந்துக் கொண்டிருந்தது?
தொடரும்............