10 Sep 2019 12:45 amFeatured
அத்தியாயம் 4
விமானத்துக்குள் மறைந்திருந்த கமாண்டோக்கள்!
இஸ்ரேலில் மொசாத் தலைமையகம் பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடித் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கென்யாவுக்குள் முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகளும் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கலாமா?
மொசாத்தின் திறமைசாலிகளான உளவாளிகள் எனத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இந்த ஆறு பேரில் இரண்டுபேர், விமானங்களையும் செலுத்தக் கூடியவர்கள்.இந்த இருவரும் களத்தில் இறங்கினார்கள்.
தாங்கள் இருவரும் இயற்கைக் காட்சிகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்பட நிபுணர்கள் என வெளியாட்களிடம் கூறிக்கொண்டார்கள். தனியார் விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றுக்குள், இவர்கள் நுழைந்தார்கள்.
கென்யாவில் சிறிய விமானங்களை வாடகைக்கு விடும் தனியார் நிறுவனங்கள் அதிகம் உண்டு. காரணம், காடுகளில் மிருகங்களைக் கண்டுகளிக்கும் சபாரி பயணங்களுக்காக வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் வரும் நாடு கென்யா. வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் அவை.
அப்படியொரு நிறுவனத்தில் சிறிய செஸ்னா ரக விமானத்தை, இந்த இருவரும் உல்லாசப் பயணிகள்போல வாடகைக்கு எடுத்தார்கள். அவர்கள் இந்த விமானத்தில் ஏறி முதலில் லேக் விக்டோரியா ஏரிக்கு மேலே பறந்து சில புகைப்படங்களை எடுத்தார்கள்.
அதன்பின், விமானத்திலிருந்த ரேடியோ சாதனம் மூலம் உகண்டாவின் விமானக் கட்டுப்பாட்டு டவரைத் தொடர்பு கொண்டார்கள்.
தாங்கள் உல்லாசப் பயணிகளுக்கான புத்தகம் ஒன்றைத் தயாரிக்கும் ஆட்கள் என அறிமுகம் செய்து கொண்டார்கள். அந்தப் புத்தகத்துக்காக ஏர்-வியூவில் புகைப்படங்கள் எடுப்பதாகவும், உகண்டாவின் வான் எல்லைகளுக்குள்ளேயும் பறந்து புகைப்படங்கள் எடுக்கவேண்டும் என்றும், உகண்டாவின் விமானக் கட்டுப்பாட்டு டவரில் அனுமதி கோரினார்கள்.
இவர்கள் மொசாத் உளவாளிகள் என்ற விஷயம் தெரியாமலேயே, விமானக் கட்டுப்பாட்டு டவரில் இருந்து அனுமதி கிடைத்தது.
இவர்கள் பறக்க அனுமதி கேட்டிருந்தது உகண்டாவின் எல்லைக்குள் ஓடும் விக்டோரியா ஏரிக்குமேல் பறந்து புகைப்படம் எடுப்பதற்கு! ஆனால் இவர்களது செஸ்னா விமானம், லேக் விக்டோரியா ஏரியைப் புகைப்படம் எடுத்ததுடன் நின்று விடவில்லை.
அதற்கு அருகிலுள்ள என்டபே விமான நிலையத்துக்கு மேலேயும் பறந்து புகைப்படங்களை எடுத்துத் தள்ளியது. அந்த விமான நிலையக் கட்டடத்துக்குள்தான் பணயக் கைதிகளும் இருந்தார்கள். தீவிரவாதிகளும் இருந்தார்கள்.
விமான நிலையத்தின் ரன்வே, அதற்கு அருகிலுள்ள கட்டடங்கள் என்று எல்லாமே புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, உடனே இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.
இந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, டேவிட் கிம்சே அதிரடித் தாக்குதல் திட்டத்தைப் போடத் தொடங்கினார். அதின் முக்கிய அம்சம் கடத்தல்காரர்களை தொழில்நுட்பத்தை வைத்து குழப்புவது என்பதாக இருந்தது.
மொசாத் ஒரு பக்கமாக அதிரடி மீட்பு நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் அரசியல் ரீதியான சில வேலைகளையும் செய்து கொண்டிருந்தது இஸ்ரேலிய அரசுத் தலைமை.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர், நேரடியாகவே உகண்டாவின் தலைவர் இடி அமீனின் அரண்மனையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “இடி அமீனுடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசவேண்டும்” என்றார்.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கை இடி அமீனின் மாளிகை அதிகாரிகளால் (இடி அமீனின் உத்தரவுப்படி) நிராகரிக்கப்பட்டது.
அப்படித்தான் நடைபெறும் என்பதை அவரும் ஊகித்திருந்தார்.
இடி அமீன் பேசமாட்டார் என்பதை ஊகித்திருந்தும், அவர் இடி அமீனின் மாளிகையைத் தொடர்பு கொண்ட காரணமே வேறு. அங்கிருந்த முக்கிய அதிகாரிகளுடன், அவரால் பேச முடிந்தது. அதுதான் அவருக்குத் தேவை.
இடி அமீன் மாளிகையின் முக்கிய அதிகாரிகளுடன் பேசும்போது, “உங்களது நாட்டின் (உகண்டா) விமான நிலையத்தில் இஸ்ரேலியப் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருப்பதால், இது ஒரு சம்பிரதாயமான தொலைபேசித் தொடர்பு” என்று தெரிவித்தார் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர். அத்துடன் அந்த பணயக் கைதிகளுக்கு உகண்டா அரசு உணவு வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
இதைச் சொல்வதற்கா போன் பண்ணினார்? இல்லை.
இந்தப் பேச்சுக்களின்போது, கதையோடு கதையாக, பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக கடத்தல்காரர்களின் சகல கோரிக்கைகைகளும் ஏற்பது என்ற நிலைப்பாட்டை இஸ்ரேலிய அரசு எடுத்திருப்பதாக (பொய்தான்!) மீண்டும், மீண்டும் கூறினார்.
இடி அமீனின் அரண்மனையிலுள்ள அதிகாரிகளுக்கு இதை ஏன் அவர் சொல்ல வேண்டும்? அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
முதலாவது, இஸ்ரேல் கடத்தல்காரர்களுக்குப் பணிந்து போகப்போகின்றது என்ற நம்பிக்கை உகண்டா அரசுக்கு ஏற்பட்டால்தான் பாதுகாப்பு விஷயத்தில் உகண்டா அஜாக்கிரதையாக இருக்கும்.
அப்படியொரு நம்பிக்கை உகண்டா அரசுக்கு ஏன் ஏற்பட வேண்டும்?
தமது பரிவுக்குரிய தீவிரவாத அமைப்பின் கடத்தல்காரர்கள்மீது, தமது நெடுநாள் விரோதியான இஸ்ரேலினால், தமது நாட்டு விமான நிலையத்தில் வைத்தே தாக்குதல் ஒன்று நடைபெறப்போகின்றது என்ற விஷயத்தை உகண்டா ஊகித்து விட்டால் என்ன நடக்கும்? உகண்டா தனது ராணுவத்தைக் கொண்டுவந்து அந்த விமான நிலையத்தைச் சுற்றி நிறுத்தி விட்டாலும் விடலாம்.
அப்படியான உஷார்படுத்தலைத் தடுத்து, உகண்டா அரசை அஜாக்கிரதையாக இருக்க வைப்பதே இந்தத் தொலைபேசி உரையாடலின் முதலாவது நோக்கம்.
இரண்டாவது நோக்கம், இடி அமீனின் மாளிகை அதிகாரிகளுக்குக் கூறப்பட்ட இந்த விஷயம் எப்படியும் கடத்தல்காரர்களுக்கு நிச்சயம் போய்ச்சேரும் என்பதை, இஸ்ரேல் ஊகித்திருந்தது. அப்போதுதான் அவர்களும் அலட்சியமாக இருப்பார்கள்.
ஒரு ராஜதந்திரியின் தொலைபேசி அழைப்பு உளவுத்துறை ஆபரேஷனுக்கே பாதை அமைத்துக் கொடுத்திருப்பதைப் பார்த்தீர்களா? இஸ்ரேலைப் பொறுத்தவரை இது மிகவும் சகஜமான ஒரு விளையாட்டுத்தான்!
இந்த ராஜதந்திர விளையாட்டைச் செய்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை இஸ்ரேல். ராஜதந்திர அளவில் மற்றுமோர் வேலையும் செய்தது. வெளிவிவகார அமைச்சின் மூலம் தமது நட்பு நாடுகளின் தூதரகங்களையும் தொடர்பு கொண்டது. அப்படித் தொடர்பு கொள்ளப்பட்ட தூதரகங்களிடமும், “கடத்தல்காரர்களிடம் பணிந்து போவதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை” என்றே கூறப்பட்டது.
இப்படித் தொடர்பு கொள்ளப்பட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் ஒன்று பிரிட்டிஷ் தூதரகம்.
“உகண்டாவிலிருந்த இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டுவிட்டது. இதனால், உகண்டாவில் அப்போதும் இயங்கிக் கொண்டிருந்த உங்களது (பிரிட்டனின்) தூதரக உயரதிகாரியை எங்களது சார்பில் உகண்டாவில் பேச்சு வார்த்தைகளை நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா?” என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டது.
பிரிட்டிஷ் அரசும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தது.
இஸ்ரேலின் சார்பில் உகண்டா அரசுடன் பேசுவதற்கு அங்கிருந்த தூதரக உயரதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த பிரிட்டிஷ் தூதரக உயரதிகாரியும், இஸ்ரேல் கடத்தல்காரர்கள் கேட்பதையெல்லாம் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றது என்றே உகண்டா அரசிடம் கூறிக்கொண்டிருந்தார்.
(இஸ்ரேலுக்காக உகண்டா அரசுடன் பேசிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்பதாகக் கூறுவது டூப் என்பதை ஊகித்திருந்தாரா என்பது தெரியவில்லை)
ராஜதந்திர விளையாட்டுகள் இப்படியாக ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கமாக மொசாத்தின் அதிரடி நடவடிக்கையின் முதற் கட்டம் தொடங்கியது.
இஸ்ரேலுக்குச் சொந்தமான ஒரு போயிங் 707 விமானம் (ஆம். அந்த நாட்களில் 707தான் பாவனையிலிருந்த பிரபல விமானம்!) ஒன்று டெல்அவிவ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. கிட்டத்தட்ட 9 மணிநேரம் பறந்தபின், கென்யாவின் நைரோபி விமான நிலையத்தில் போய் தரையிறங்கியது அந்த விமானம்.
நைரோபி விமான நிலையத்தில் விமானம் இறங்கியதுத் கென்ய விமான நிலைய அதிகாரிகள் தமது வழக்கமான செயல்பாடாக, விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர்.
மொசாத்தின் ஆலோசனைப்படி, அந்த விமானம் ஒரு பறக்கும் வைத்தியசாலை போலவே அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் என்று நிறையவே இருந்தன. அத்துடன் இஸ்ரேலிய டாக்டர்கள் குழு ஒன்றும் அந்த விமானத்தில் இருந்தது.
உண்மையில் அந்தக் குழுவில் இருந்தவர்கள் டாக்டர்கள் அல்ல. அவர்கள் மொசாத்தின் ஏஜன்ட்கள்தான் என்ற விபரம், நைரோபி விமானநிலைய அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதைவிட முக்கிய விஷயம், இந்த விமானத்தின் கீழ்ப்பகுதி (கார்கோ ஏற்றுமிடம்) மாற்றியமைக்கப்பட்டு, அதனுள் கமாண்டோக்கள் மறைந்திருந்தனர்.
இவர்கள் உபயோகித்த 707 விமானத்திற்கு வெளியே எந்த விதமான எழுத்தும் எழுதப்பட்டிருக்கவில்லை. வழமையாக எந்தவொரு விமானத்திலும் குறைந்த பட்சம் அது எந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் என்றோ, எந்த நாட்டுக்குச் சொந்தமான விமானம் என்றோ எழுதப்பட்டிருக்கும். இதில் அப்படி எதுவுமே இல்லை.
அந்த விமானத்தைச் செலுத்திய இரு விமானிகளும், பயணிகள் விமானங்களைச் செலுத்தும் ஆட்களல்ல. இஸ்ரேலிய விமானப்படையைச் சேர்ந்த விமானிகள்!
இஸ்ரேலின் போயிங் 707 விமானம் நைரோபி விமான நிலையத்தில் தரையிறங்கிய அதே நேரத்தில், தொடரின் முன்பகுதியில் நாங்கள் கூறிய லேக் விக்டோரியாப் பாதை வழியாக 6 மொசாத் ஏஜன்ட்களும் உகண்டா நாட்டுக்குள் யாருமறியாமல் நுழைந்துவிட்டிருந்தார்கள்.
இந்த ஆறுபோரிடம் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் இருந்தன.
மொசாத் தலைமையினால் அவர்களுக்கு இஸ்ரேலில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த திட்டப்படி, அவர்கள் ஆறுபேரும் என்டபே விமான நிலையத்தின் வெளிப்புறமாக சூழ்ந்து கொண்டு மறைந்திருக்க வேண்டும். அங்கிருந்து தரையில் நடைபெறும் சம்பவங்களை நைரோபியிலுள்ள தொலைத் தொடர்புக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தெரிவிக்கவேண்டும்.
அது மாத்திரமல்ல அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. மற்றொரு முக்கிய வேலையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அது, தம்மிடமுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களையும், உகண்டாவின் விமானநிலைய அதிகாரிகளையும் குழப்பியடிப்பது.
அதை எப்படிச் செய்யப்போகிறார்கள்?
நாளை தொடரும்……….