Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

உளவாளிகளின் மர்ம உலகம் (தொடர்-5)

12 Sep 2019 12:43 amFeatured Posted by: Sadanandan

You already voted!

அத்தியாயம் 5
வெற்றியா!? தோல்வியா!? இறுதிகட்ட பரபரப்பு!!

என்டபே விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகள் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.  இப்போது அதிரடி ஆபரேஷனுக்கு வரவேண்டிய கமாண்டோக்கள் எப்படி வந்து சேரப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். கமாண்டோக்களுடன் இஸ்ரேலிய விமானப்படையின் சீ130 விமானங்கள் முதலில் நைரோபி விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டும். அங்கே அந்த விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்ட வேண்டும்.

எரிபொருள் நிரப்பும் அனுமதி ஏற்கனவே கென்ய அரசால் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எத்தனை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும் என்ற விஷயத்தை இஸ்ரேல் தமது எழுத்துபூர்வமான கோரிக்கையில் சாமர்த்தியமாக தவிர்த்து விட்டிருந்தது.அவர்களது நல்ல காலம் கென்ய அதிகாரிகளும் இதைக் கவனித்து விசாரித்திருக்கவில்லை.

மூன்று விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் நைரோபி விமான நிலையத்திலிருந்து இந்த விமானங்கள் கிளம்பும்போது, முன்னரே அங்கு தரையிறங்கி நிறுத்தி வைக்கப்பட்டிக்கும் போயிங் -707 விமானமும் கூடவே கிளம்பிச் செல்லவேண்டும்.

கிளம்பும் அனைத்து விமானங்களும் எங்கே செல்கின்றன என்ற விபரத்தை கென்யா நாட்டு அதிகாரிகளுக்குச் சொல்லக் கூடாது.

இந்த முழுத் திட்டத்திலுள்ள மைனஸ் பாயின்டே இதுதான். ஒருவேளை கென்ய அதிகாரிகள், இவர்கள் செய்யப் போவதை ஊகித்து, சீ130 ரக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுக்கலாம். அல்லது இந்த விமானங்கள் அனைத்தும் கிளம்பியவுடன், உகண்டாவுக்கு தகவல் கொடுத்தாலும் கொடுக்கலாம். இவைதான் இந்தத் திட்டத்திலுள்ள மைனஸ் பாயின்ட்கள்.

ஆனால், மொசாத் வேறு வழியில்லாமல் அந்த ரிஸ்க்கை எடுக்கவேண்டியிருந்தது.

இஸ்ரேலில் இருந்து கிளம்பியிருந்த சீ-130 விமானங்களின் விமானிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய விமானப் பாதை பற்றிய பிளைட் பிளான் ஒன்று மொசாத்தாலேயே தயாரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக இந்தப் பாதையில் பயணிக்கும் எந்த விமானமும் இப்படியான ஒரு பிளைட் பிளானை உபயோகிக்காது என்ற வகையிலான, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பிளைட் பிளான் அது.

கொடுக்கப்பட்ட பிளைட் பிளானின்படி விமானப் பாதை ஆபிரிக்கக் கண்டத்தில் முடிந்தவரை எந்தவொரு நாட்டின் மேலாகவும் பறக்காமல், செங்கடலின் மேலாகப் பறந்து கடந்து பின்னர், தெற்கு நோக்கித் திரும்பி ஒரு சுற்றுப்பாதையூடாக கென்ய வான்பரப்புக்குள் பிரவேசிப்பதாக இருந்தது.

இதற்குக் காரணம் என்னவென்றால், எந்தவொரு நாட்டின் வான்பரப்புக்கு மேலால் எந்த விமானங்கள் பறந்தாலும் அந்த நாட்டின் ஏதோ ஒரு கன்ட்ரோல் டவரிடம் அனுமதி பெற வேண்டும். இஸ்ரேலிய விமானங்கள் அந்தப் பிராந்தியத்தில் எங்கோ செல்லும் விஷயம் வேறு எந்தவொரு ஆபிரிக்க நாட்டின் கன்ட்ரோல் டவருக்கும் தெரியக்கூடாது.

எல்லாமே மிகத் துல்லியமான திட்டம்தான். ஒரேயொரு ரிஸ்க், நாங்கள் முதலில் கூறியது போல கென்ய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுவதுதான்.
ஆனால் இவர்களது அதிஷ்டம், அவர்கள் கடைசிவரை சந்தேகப்படவில்லை.

அனைத்து விமானங்களும் நைரோபி விமான நிலையத்தில் வைத்து எரிபொருள் நிரப்பிவிட்டு குறித்த நேரத்தில் மேலெழுந்தன. திட்டப்படி விமானங்கள்அனைத்தும் 36000 அடி உயரத்தில் பறந்தபடி உகண்டாவின் வான் எல்லைக்குள் பிரவேசித்தன.

திடீரென தாழப்பதிந்து, ஒவ்வொன்றாக என்டபே விமான நிலைய ரன்வேயில் தரையிறங்கின.

வழமையாக ஒரு விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் சில உண்டு. ரன்வேயில் விமானம் ஓடி நிறுத்தப்படவேண்டிய தூரம், வேகக் கட்டுப்பாடு போன்ற இந்த நடைமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் லேன்டிங் செய்தார்கள்.

தரையிறங்கிய உடனே த்ரஸ்ட் ரிவேசர் மூலம் விமானத்தின் வேகம் சடுதியாக குறைக்கப்பட, விமானம் மிக மோசமாக குலுங்கிக் குலுங்கி ரன்வேயில் ஓடியது.

சகல விமானங்களும் ரன்வே முடியும் முன்னரே டாக்ஸிவேயில் திருப்பப்பட்டன. இந்த டாக்ஸிவே பணயக் கைதிகள் இருக்கும் கட்டிடத்துக்கு முன்னால் விமானத்தைக் கொண்டு போய் விடும்.

பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் முன் விமானம் போய் நிறுத்தப்படும் முன்னரே கமாண்டோக்கள் தரையில் குதித்து சுடத் தொடங்கினார்கள்.


இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்தக் குழப்பத்தில் கமாண்டோக்கள் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்துக்குள் சடுதியாக நுழைந்தார்கள். காவலுக்கு இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளும் முன்னரே சுடப்பட்டார்கள்.

பணயக்கைதிகளை ஓடிப்போய் விமானங்களில் ஏறுமாறு கமான்டோக்கள் கத்தினார்கள். ஓடமுடியாத பணயக்கைதிகளை கமாண்டோக்கள் சுமந்துகொண்டு ஓடினார்கள்.

எல்லாமே கடகடவென நடந்துவிட்டன.

முதலாவது கமாண்டோ தரையில் குதித்த வினாடியிலிருந்து, மீட்கப்பட்ட கடைசி பணயக்கைதி விமானத்துக்குள் ஏற்றப்பட்ட விநாடி வரையிலான நேரம் சரியாக 5 நிமிடங்கள்.

திட்டமிடப்பட்டிருந்த நேரத்துக்கு 2 நிமிடங்களுக்கு முன்னரே எல்லாம் முடிந்துபோய் பணயக் கைதிகளுடன் விமானங்கள் ரன்வேயில் ஓடத் தொடங்கின.

நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கடத்தல்காரர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தார்கள். அத்துடன் பணயக்கைதிகளை காவல்காப்பதற்காக லோக்கலில் ஒழுங்கு செய்யப்பட்ட 14 உகண்டா நாட்டுக் காவலர்களும் கொல்லப்பட்டனர். கூடவே, இரண்டு என்டவே விமானநிலைய ஊழியர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

விமான நிலையத்தைச் சூழ மறைந்திருந்த 50 கமாண்டோக்களின் உதவி கடைசிவரை கோரப்பட்டவில்லை.

அவர்கள் வந்த சுவடு தெரியாமல், மீண்டும் லேக் விக்டோரியா ஏரியைக் கடந்து கென்யா நாட்டுக்குள் சென்றுவிட்டனர். மறுநாளே  இஸ்ரேலிய விமானப்படையின் மற்றுமோர் விமானம் வந்து அவர்களை அழைத்துச் சென்றது.

இந்த அதிரடி நடவடிக்கையின்போது கடத்தற்காரர்கள் திருப்பிச் சுடவில்லையா? சுட்டார்கள். அப்படிச் சுட்டதில் இஸ்ரேலியக் கமாண்டோக்களில் ஒரேயொருவர் மாத்திரம் உயிரிழந்தார். அவரது பெயர் லெப். கேணல் யொனாதன் நெட்டான்யாகூ.

இவர் யார் என்பதிலும் ஒரு சுவாராசியமான தரவு உண்டு. இந்த ஆப்ரேஷன் நடைபெற்றுப் பல வருடங்களின் பின்னர் இஸ்ரேலில் பிரதமராகிய பென்யமின் நெட்டன்யாகுவின் மூத்த சகோதரர்தான், இந்த அதிரடி நடவடிக்கையில் இறந்துபோன ஒரேயொரு இஸ்ரேலியக் கமாண்டோ.

அவர் கொல்லப்பட்டாலும், மொசாத் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை மிகப் பெரிய வெற்றி!

மொசாத்தின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஒருசில கண்டனங்கள் எழுந்தாலும், இதன் வெற்றி அனைத்தையும் மறைத்துவிட்டது. இன்றுகூட உலகிலுள்ள அநேக உளவுத்துறைகள்,  தமது உளவாளிகளுக்கான ஆரம்பப் பயிற்சியில் கூறும் வரலாற்றுச் சம்பவமாகி விட்டது இந்த அதிரடி நடவடிக்கை.

முற்றும்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096539
Users Today : 24
Total Users : 96539
Views Today : 32
Total views : 416674
Who's Online : 0
Your IP Address : 18.223.195.127

Archives (முந்தைய செய்திகள்)