Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மறக்க வேண்டியதை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்? -வைகோ அறிக்கை

23 Jan 2020 1:21 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

தந்தை பெரியார் ஆற்றிய அருந்தொண்டிற்காக ஐ.நா.வின் அனைத்து நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம், யுனெஸ்கோ மன்றம் (UNESCO) 1970 ஆம் ஆண்டு பெரியாருக்குச் சிறப்பு விருது வழங்கி கவுரப்படுத்தியது. அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடந்த விழாவில், மத்திய அரசின் கல்வி அமைச்சர் டாக்டர் திரிகுணசென் அவர்கள் யுனெஸ்கோ அளித்த விருதை தந்தை பெரியாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

“புத்துலகத் தொலைநோக்காளர்;
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீசு;
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை;
அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள்,
இழிவான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின்
கடும் எதிரி”
என்று யுனெஸ்கோ வழங்கிய பட்டயத்தில் தந்தை பெரியார் அவர்களை சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழறிஞர் சாமி.சிதம்பரனார், “பெரியார் ஒரு பிறவிப் போர் வீரர் (A Born Soldier)” என்று பாராட்டியிருந்ததைப் போல, தம் வாழ்நாள் முழுவதும் மனித சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக சுயமரியாதை வாழ்வுக்காக போராடியவர் தந்தை பெரியார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் திருக்குறள் நெறியைப் போற்றி பிறப்பிலே ஏற்றத் தாழ்வு கற்பித்த மடைமைகளைத் தகர்த்து தவிடு பொடியாக்கி மனித சமத்துவ, சமதர்ம உரிமை வாழ்வு நிலைக்க பாடுபட்டவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் வாழ்வின் தொண்டு அறம் பற்றி மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் குறிப்பிட்டபோது,“பெரியார் ஒருவரே திராவிட - ஆரியப் போர்க்களத்தில் புகுந்து உடைபடை தாங்கி இடைவிடாது போராடி,கல்லாப் பொதுமக்கள் கண்ணைத் திறந்து, கற்றோர்க்கும் தன்மான உணர்ச்சியூட்டி, தலைதூக்கொண்ணாது அடித்து வீழ்த்தி - ஆச்சாரியார் புகுத்திய இந்தியை எதிர்த்துச் சிறைத் துன்பத்திற்கு ஆளாகி, கணக்கற்ற சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத்தும், பகுத்தறிவு இயக்கத்தைத் தோற்றுவித்தும், மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்தும்,
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு
- குறள் 1029
செயற்கரிய செய்வார் பெரியார் – சிறியர்
செயற்கரிய செய்கலாதார்
- குறள் 26
என்னுங் குறள்கட்கு இலக்கணமானார்” என்று பாராட்டிப் போற்றினார்.

பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல; ஓர் இயக்கம். சமுதாயத்தை மாற்ற வந்த இயக்கம்.

மாற்றம் என்றால் சாதாரண மாற்றமா?

பாராட்டிப் போற்றி வளர்த்த பழமை லோகம்; ஈரோட்டுப் பூகம்பத்தால் இடிந்தது.

பூகம்பம் வந்து கோட்டை, கொத்தளங்களைப் புரட்டிப் போட்டது போல்,அவை சாதாரண கோட்டைகளா? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அசைந்து கொடுக்காமல் குன்றென நிமிர்ந்து நின்ற கோட்டைகள்.

வேதங்கள், புராணங்கள், சாத்திரங்கள், மதங்கள் என்ற அகழிகளும், ஆசாரம், அனுஸ்டானம், சம்பிரதாயம், சடங்கு என்ற படைக்கலன்களும் குவித்து வைத்திருந்த கோட்டைகள் பெரியார் என்ற பூகம்பத்தால் சரிந்தன; இடிந்தன; விழுந்தன; இருந்த இடம் தெரியாமல் மண்மேடாக ஆயின.

தந்தை பெரியார் ‘ஒரு சகாப்தம்’ என்று புகழ்ந்த பெரியாரின் தலைமாணாக்கர் பேரறிஞர் அண்ணா அவர்கள், “பெரியார் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?

அக்கிரமம் எங்கு கண்டாலும், எந்த வழியிலே காணப் படினும் எத்தனை பக்கபலத்துடன் வந்திடினும் பெரியார் அதனை எதிர்த்துப் போராடத் தயங்கியது இல்லை” என்று பழமை இருள் அகற்றிப் புத்தொளி கொடுக்க வந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை புகழ்ந்துரைத்தார்.

“இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், சாதிக் கொடுமைகளையும் எதிர்த்து முதல் முதலாக வைக்கத்தில் போராடி வெற்றி கண்ட ‘வைக்கம் வீரர்’ பெரியரின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டதால்தான் மராட்டிய மாநிலத்தில் கோயில் நுழையும் போராட்டத்தைத் தான் நடத்த முடிந்தது” என்று உரக்கச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர் என்பது வரலாறு.

சமூக நீதிக்காகப் போராடி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர் பெரியார்.

பெண்ணடிமைக் கோட்பாட்டை அழித்து மகளிர் விடுதலையைச் சாதித்தவர் பெரியார்.

அந்திமக் காலம் நெருங்கிய நிலையிலும், சென்னை தியாகராய நகரில் டிசம்பர் 19, 1973 இல் ஆற்றிய இறுதிப் பேருரையில் தமிழின விடுதலைக்காக டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்டவர் தந்தை பெரியார்.

தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து இருக்கின்ற தலைவர் தந்தை பெரியார் அவர்கள் குறித்து நண்பர் நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் கூறிய கருத்துக்ளை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆதாரபூர்வமாக மறுத்து இருக்கின்றார்.

அதன் பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் ரஜினிகாந்த், “இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்” என்று மட்டும் கூறுகிறார்.

மறக்க வேண்டிய நிகழ்வுகளை ஏன் இவர் இப்போது நினைவூட்டுகிறார்? என்ற கேள்வி எழுகிறது!

தந்தை பெரியார் குறித்து அவதூறாகக் கருத்துக் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது எதனால்?

எய்தவர்கள் யார்? என்று தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது இயற்கையே!

தொடங்கி வைத்தது ரஜினிகாந்த்; அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்!
என மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர், வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096546
Users Today : 7
Total Users : 96546
Views Today : 10
Total views : 416684
Who's Online : 0
Your IP Address : 3.138.125.86

Archives (முந்தைய செய்திகள்)