08 Oct 2019 6:04 pmFeatured
திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகமும் ஒளவை அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கலைமகள் ஓளவையார் திருவிழா, ஓளவைக் கோட்டத்தின் அறிஞர் பேரவையின் தலைமை மற்றும் தலைமை இணை அமைச்சர்கள் பொறுப்பேற்கும் விழா, ஓளவையின் எழில் திருத்தேர் உலா, மகாத்மா காந்திஅடிகளின் 150 ஆவது பிறந்தநாள் விழா, நாட்டுப்புற ஆடற்கலை விழா என ஐம்பெரும் நிகழ்வானது தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள ஒளவைக் கோட்டத்தில் வைத்து அந்த அமைப்பின் மதிப்பீட்டுத் தலைவர் முத்தமிழரசி சரஸ்வதி இராமநாதன் தலைமையில் திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழக ஆளுனர் மருத்துவர் நரேந்திரன் முன்னிலையில் நேற்று 07.10.2019 திங்கள்கிழமை காலை ஒன்பது மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை நடந்தேறியது.
முன்னதாக நாதஸ்வரக் கச்சேரியுடன் தொடங்கிய நிகழ்வானது அண்ணல் காந்தியடிகள் புகழ்பாடும் 150 கவிஞர்களின் கவிதாஞ்சலியும் அதைத்தொடர்ந்து 'உலக உத்தமர் காந்தியடிகளின் பாமாலை' என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.
இசைத்தமிழுக்குப் பெயர்போன திருவையாற்றில் மூதாட்டி ஒளவைக்கு கோட்டம் அமைத்து அறிஞர் பேரவையில் நாற்பத்தொன்பது தமிழறிஞர்களை பொறுப்பேற்கவைத்து தமிழ்கூறும் நல்லுலகம் பெருமைப் படும் அளவிற்கு திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகத்தின் தலைவர் முனைவர் மு.கலைவேந்தனும் ஒளவை அறக்கட்டளையின் தலைவர் கண்ணகி கலைவேந்தனும் ஆற்றி வருகின்ற அன்னைத் தமிழுக்கு அணிசெய்யும் பணி கடல்கடந்தும் வாழும் தமிழ் மக்களால் போற்றத்தக்கது என்பதனை நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை தமிழறிஞர்களும் சாட்சியாக இருந்து வழங்கிய பாராட்டுரை நிரூபித்தது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலைமாமணி வி.கே.டி.பாலன் பங்கேற்று சிறப்புரை ஆற்றியதுடன் கவிதாஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும் ' காந்தியடிகள் ' விருதினையும் வழங்கி சிறப்பித்தார்.
ஓளவைக்கோட்ட அறிஞர் பேரவையின் தலைமை அமைச்சராக செந்தமிழ் வள்ளல் சு.கார்த்திகேயனும் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி முத்தமிழரசி சரஸ்வதி இராமநாதனின் அறிமுக உரையுடன் தொடங்கி ஆளுனர் மருத்தவ அறிஞர் நரேந்திரன் மற்றும் முன்னாள் தலைமை அமைச்சர் ச.அருள்பிரகாசம் வாழ்த்துரைக்குப்பின் ஓளவைக்கோட்ட அமைச்சர் செல்வராஜ் நன்றியுரைக்குப் பின் நிறைவுற்றது. அனைத்து நிகழ்வினையும் கவிஞர் கார்முகிலோன் தொகுத்து வழங்கினார்.
இறுதியில் ஔவையின் தேர் உலா நிகழ்வு திருவையாறு ஒளவைக்கோட்டம் அமைந்துள்ள நான்கு வீதிகளிலும் திருவள்ளூர் மற்றும் மதுரையிலிருந்து வந்திருந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் என பல்வேறு வகைக் கலைகளின் தொகுப்புடன் வீதியெங்கும் உலாவந்தது. கலைமகள் பிறந்த நாளை ஓளவையின் பிறந்த நாளாக இதே நாளில் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற நிகழ்ச்சியை மக்கள் ஆங்காங்கே கண்டு களித்து ரசித்தது தமிழுணர்விற்கு உரமேற்றும் நிகழ்வாகவே அமைந்தது.