29 Aug 2020 12:00 amFeatured
(சிறுகதை)
-வே.சதானந்தன்
பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் தென்னரசு மாத இதழில்
2015 ஜூலை மாதம் பிரசுரித்த சிறுகதையும் படமும்
கை சாந்து பூசிய பழைய வீடு ஆங்காங்கே காரை பெயர்ந்த சுவர்கள், அவ்வப்போது சிமெண்ட்டால் ஒட்டுப்போட்ட தரை, பகலில் சூரியனும் இரவில் நிலவும் தங்கு தடையின்றி வீட்டுக்குள் தங்கள் ஒளியைப் பாய்ச்ச வசதியாக விலகி நிற்கும் கூரை ஓடுகள்.
அதிர்ந்து பேசா மனைவி அன்னம்மா.
முதிர் கன்னிக்கு முந்தைய பருவத்தில் கனவுகளைச் சுமந்தபடி மகள் மேகலை.
கணினித் துறையில் பட்டம் பெற்று கால்தேய நடந்து வேலைதேடும் மகன் மணிவண்ணன்.
இவர்களின் தந்தை ஆறுமுகம் வருமானத்திற்கு மேல் 10% கூட சம்பாதிக்க வாய்ப்பற்ற ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
நிலபுலன்கள் இருந்தும் நிலத்தடி நீர் அதன் பாதாளத்திற்குப் போய்க் கிணறு வற்றியதால் வாழாவெட்டியாய் வாழ்ந்து வந்தன விவசாய நிலங்கள். ”நிலம் கையகப்படுத்தும்” சட்டத்தின் கீழ் என்றைக்கு நிலங்கள் பறிபோகுமோ என்ற கவலையில் குடும்பம்.
ஓய்வு பெற்றுக் கிடைத்த பணத்தில் மகனின் படிப்புக்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மகளின் திருமணத்திற்கென்று சிறு தொகையினை வங்கியிருப்பில் சேமித்து வைத்துவிட்டு "ஏழைக் கேற்ற எள்ளுருண்டையாய்” மணமகனை தேடிக்கொண்டிருந்தார்.
வந்ததோ தகுதிக்கு மீறிய வரன். ஆனாலும் வரவேற்றார் வாசலில் நின்று. மூன்று மாதங்களுக்கு முன் மகள் வேலைக்குச் செல்லும்போது அறிமுகமாகி அரும்பிய காதலல்லவா? மறுக்கவா முடியும்? அல்லது மறுக்கும் வசதியோ தகுதியோ இல்லையே
மணமகளின் வீட்டாரில் மணமகனின் அம்மா அம்சவல்லி ”அல்லி ராணியின்” அவதாரம், ஆனால் அப்பா ஆதிகேசவன் ”வாயில்லா பூச்சி” மணமகனின் அக்கா கணவர் அக்காவின் கண்ணசைவுக்குக் காத்திருக்கும் ”ஆமாஞ்சாமி” தான்,
ஊரின் பெருசுகளும், உறவுகளுமாக சிலர் கூடியிருக்க, மணமகனின் அம்மா அம்சவல்லி ஆரம்பித்தார். "இந்தா பாருங்க என் மகளுக்கு பவுன் நகையும் மூணு லட்சம் ரொக்கமும் கொடுத்துதான் 5 மாசத்துக்கு முன்னாடி கல்யாயாணம் பண்ணிக் கொடுத்தோம். ஒரே மகள் என்பதால் என் மகனும், எங்க வீட்டுக்காரரும் முகம் கோணாமல் செஞ்சாங்க. இப்போ அவ நல்லா இருக்கா, மருமகனும் எங்களுக்கு ஒரு மகனா ஒத்தாசையா இருக்காரு (வீட்டோட மாப் பிள்ளையா வந்துவிட்டாரென்று சொல்லக்கூடாது அல்லவா), அதனால சுத்தி வளைச்சு பேச விரும்பல. உங்க பொண்ணுக்கு எவ்வளவு செய்விங்க அதச் சொல்லுங்க ஏன்னா என் மகன் ஆசை பட்டுட்டேனேன்னு தான் இங்க வந்துருக்கோம்” என்றார்.
இந்தி ’கலர்ஸ் சேனலில்’ அதிர்ச்சியான செய்தியைக் கேட்டவுடன் பாத்திரங்களின் முகம் வெளுக்குமே அதேபோல் மணமகளின் இல்லத்தார் முகம் வெளிறியது, சமாளித்துக் கொண்டு ஆசிரியர் அறுமுகம் பதில் அளித்தார்.
“சம்மந்தியம்மா எங்க தகுதிக்குத் தகுந்த மாதிரி தான் செய்ய முடியும் ஒரு 10 பவுன் நகை ஏற்கனவே செஞ்சு வச்சிருக்கோம். மேல ஒரு 5 பவுனும், பையனுக்கு ஒரு ஒண்ணரை பவுனுக்குச் செயினும் போடுறோம். கல்யாண செலவுல பாதிய ஏத்துக்கிறோம். வேற ரொக்க மெல்லாம் கொடுக்கமுடியாது” என்றார்.
மணமகனின் தந்தையும் அதை ஆமோதிப்பதைப் போல தலை அசைக்க. அடுத்த நொடியே அடக்கியது அவரது ”அம்மிணி” அம்சவல்லியின் பார்வை.. மகனை ஏறிட்டுப் பார்த்தாள். அதில் ஆயிரம் டன் கோபமும் அரை டன் நக்கலும் இருந்தது. "இந்தா பாருங்க, எங்க தகுதிக்குப் பெரிய இடமா பாத்திருக்க முடியும். ஆனா என் மகன் விரும்பிட்டானேன்னுதான் இங்க வந்தோம். 35 பவுனும் 3 லட்ச மும் கொடுத்தா மேற்கொண்டு பேசுவோம் இல்லண்ணா விட்டுடுங்க" என்றவரிடம், ஊர்ப் பெரியவர் ஒருவர் "இங்க பாருங்கம்மா பையனும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் மனசார விரும்புறாங்க. இது நகைநட்ட பார்க்காதீங்க அவுங்க மனசப் பாருங்க” என்றார்
ஆசிரியர் அவர் நிலமையை மீண்டும் எடுத்துரைத்தும் அம்சவல்லி அசைந்த பாடில்லை.
காதலர்கள் கண்கள் சந்தித்து.
காதலியின் கண்ணில் என்னங்க ? என்ற ஏக்கக் கேள்வி
காதலனின் கண்ணிலோ தாயை மீறமுடியாத இயலாமை
பதிலாய் வர,
காதலன் கணவனாக மாற வாய்ப்பில்லை என்று முடிவாகிவிட்டது இனி ஜாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற முடிவுக்கு வந்தவளாக இறுதி அஸ்திரத்தை எடுத்தாள் மேகலை.
”அப்பா நான் இவரதான் மனசார விரும்பினேன் இவரைத்தவிர வேற ஒருவரை நான் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. அதனால் நம்ம நிலங்களை வித்தாவது அவுங்க கேட்டதை கொடுங்க” என்றாள் ஆசிரியரோ மகனையும் மனைவியையும் பார்க்க, அவர்கள் கண்ணசைவில் சம்மதம் தெரிவிக்க
ஆசிரியர் ”சரி என் மகள் வாழ்க்கைதான் எங்களுக்கு முக்கியம் நீங்க கேட்டதை செஞ்சிடுவோம் என்று சம்மதித்தார்.”
இறுக்கமான சூழல் நீங்கி இணக்கமான சூழ்நிலை ஏற்பட அம்சவல்லி வெற்றிப் புன்னகையுடன் சரி இனிமே என்ன தாமதம்: தாம்பூலத் தட்டை மாத்திக்குவோம் என்று சொல்ல தாம்பூல தட்டுக்களை எடுத்து மாற்றிக்கொள்ளத் தயாரான போது ”அப்பா ஒரு நிமிசம்…” என்று தடுத்த மேகலையை அனைவரும் ஏறிட்டுப்பார்க்க...
”அப்பா அவுங்க சொன்னபடி நீங்க சம்மதிச்சிட்டீங்க... ஆனா ஒரு கண்டிசன் அவரு' நம்ம வீட்டோட மாப் பிள்ளையா வரணும்" என்றாள்.
இப்போது மணமகன் வீட்டார் முகத்தில் அதிர்ச்சி, கலர்ஸ் சேனலின் ”White Flash” ஆக அடிக்க, அம்சவல்லி “எழும்புடா! இப்படி ஒரு வீட்டுல நாம சம்மந்தம் வைக்க வேண்டாம் என்று சொல்லிய படியே எழும்ப, மகனோ செய்வதறியாமல் திகைக்க,
"ஏ..ய்… உக்காருடி” என்ற அதிரடியான குரல் கேட்ட திசையை நோக்கி அனைவரது பார்வையும் திரும்ப ”மிக்சர்” சாப்பிட்டுக் கொண்டிருந்த மணமகனின் தந்தை ”மையான வேட்டைக்கு” செல்லும் சாமியாடியாய் நின்றார். இதுவரை கேட்டிராத குரலால் சர்வமும் அடங்கி அமர்ந்தாள் மணமகனின் தாய்
”ஏண்டி, நீ போட்டுகிட்டு வந்த 15 பவுன் நகைக்கும் ஒரு லட்சம் ரொக்கத்துக்கும் எங்கம்மா பேராசைக்கும் நான் இவ்வளவு நாளா அடிமையா இருக்க. மகளுக்கு போட்ட 30 பவுன் நகைக்கும் மூணு லட்சத்துக்கு மருமகனை அடிமையா வச்சிருக்கோம், அதே போல இந்தப் பொண்ணு என் மகனையும் அடிமையா கேக்குறா நாளைக்கு அவன் பொண்டாட்டி இதவிட அதிகமா நகைநட்டு கேட்டு இன்னொரு அடிமைய உருவாக்குவா. ஏண்டி பொம்பளைக்கு பொம்பளையே எதிரியா இருக்கங்க, வரதட்சனை கேக்குறது நீங்க, திட்டுவாங்குறது நாங்க” என்று மூச்சு வாங்காமல் பேசியவரை அனைவரும் திகைப்பாகப் பார்க்க, மகனும் மருமகனும் வீரம் வந்தவர்களாக எழுந்து நின்றனர்.
மருமகனைப் பார்த்து ”இன்னைக்கே உங்க பொண்டாட்டிய கூட்டிகிட்டு உங்க வீட்டுக்குப் போய் உங்க அம்மா அப்பா கூடஇருங்க" என்றபடி மகனை அழைத்து தன் கையில் கிடந்த மோதிரத்தைக் கழற்றிக்கொடுத்து ”இந்த மோதிரத்தை என் மருமகளுக்குப் போடுடா” என்றார்
மகன் தந்தை சொல்லே மந்திரமாக,
கூடியிருந்தோரின் கரவொலி மேளவாத்தியமாக,
மோதிரமே தாலியாகி,
கரங்களை மாலையாக்கி தோளில் போட்டபடி
அழைத்து வந்து தாய் தந்தை காலில்விழுந்து வாழ்த்து பெற்றனர்.
மருமகளைப் பார்த்துச் சொன்னார் “இங்க பாரும்மா நான் செத்து கெட்டுப் போனாலும் என் பேரனுக்கு கல்யாணம் முடிக்கும் போது பொண்ணுவீட்டுல சல்லி காசு கூட வாங்காமதான் கல்யாணம் முடிக்கணும்” என்றார். ஆசிரியரோ ஆனந்த கண்ணீரோடு சம்மந்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு ”சம்பந்தி நானும் என் மகன் திருமணத்தில் ஒரு சல்லிகாசுக்கூட வரதட்சனை வாங்க மாட்டேன்” என்று உறுதியளித்தார்.