05 Nov 2019 12:19 amFeatured
நீட் தேர்வு குறித்து தொடரப்பட்ட வழக்கு (04.11.2019) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் கைரேகை ஆவணங்களை பெற்றிருப்பதாகவும், அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் மாணவர்களின் கைரேகை பெறப்பட்டுள்ளது, அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பணி தொடங்கியுள்து என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,நீட் தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்று மருத்துவ துறையில் சேர்ந்த மாணவர்களில், தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களே அதிகம் சேர்ந்திருக்கிறார்கள்.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களில், அரசு பயிற்சி மையங்களில் பயின்றவர்களும், அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் குறைவுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முயற்சியில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவு? என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இவ்விரண்டு விஷயங்களையும் கேட்ட நீதிபதிகள்,
நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பிறகு நீட் பயிற்சி மையங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பிற மாநிலங்களில் தேர்வெழுதி, மாணவ, மாணவிகள் பலரும் ஆள்மாறாட்டம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார்கள் ஏதேனும் எழுந்துள்ளதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தனியார் பயிற்சி மையங்களால், ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளுக்கான கதவுகள் திறக்கப்படுவதில்லை. மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து நேரடியாக புகார்கள் ஏதேனும் வந்ததா என சிபிஐ தெரிவிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது – நீதிபதிகள் கேள்வி
முந்தைய ஆட்சிகள் கொண்டு வரும் திட்டங்களை புதிய அரசு நீக்கி விடுவது போல, "முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நீட் தேர்வினை, தற்போதைய அரசு ஏன் திரும்பப் பெறக் கூடாது" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுவரை மாணவ, மாணவிகளும், சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பி வந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றமும் நீட் தேர்வுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.